பாரதியின் சிந்தனைகளை கற்றலில் பின்பற்றுங்கள்                      -சிறப்பு விருந்தினர் சி.சுப்பிரமணியம் பேச்சு 

பாரதியார் பல்கலைக்கழகத்தில்  மகாகவி பாரதியின் பிறந்தநாள் விழாவும், இளம் பாரதி விருது வழங்கும் விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளருமான பேராசிரியர் சுப்பிரமணியம் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ‘பாரதியின் தந்தை பெயர் சின்னச்சாமி, பாரதியின் இயற்பெயர் சி. சுப்பிரமணியம், பாரதியின் துணைவியார் பெயர் செல்லம்மாள். எனது தந்தையின் பெயர் சின்னச்சாமி, எனது பெயர் சி. சுப்பிரமணியம், எனது மனைவியின் பெயர் செல்லம்மாள், ஆகவே இந்த ஒற்றுமையின் அடிப்படையில் நான் பாரதி பற்றி உரையாற்ற வந்துள்ளேன். காசியில் பல்வேறு மொழிகளைக் கற்ற பாரதி அனைத்தையும் உணர்ந்தபின் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றார்.

அதுபோல் மாணவர்கள் கல்வியில் எல்லாவற்றையும் கற்றுச் சிறந்ததைத் தேர்வு செய்ய வேண்டும். நம்புகின்றவர்களுக்கு உண்மையானவர்களாக இருப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இளம் பாரதி விருது வழங்கப்படுவதற்குக் காரணம் பாரதியின் சிந்தனைகளைக் கற்கின்ற மாணவர்கள் பாரதியாக வலம் வரவேண்டும். அவரைப் போன்று தமிழ்மொழிக்கும் தாய்நாட்டிற்கும் கடமையாற்ற உறுத்திக்கொள்ள வேண்டும். இந்த உணர்வு மாணவர்கள் மனதில் ஊட்டப்படுகின்றபோது இன்னும் நிறைய பாரதிகள் பிறப்பார்கள்.

வாழும் காலத்தில் புறந்தள்ளப்பட்ட பாரதி நூற்றாண்டு கடந்த பின்னரும் இன்றும் போற்றப்படுவதைக் காணும் போது, மண்ணுள்ள வரை விண்ணுள்ளவரை, தமிழ்மொழி நிலைபெற்றிருக்கும் வரை பாரதியின் புகழ் போற்றப்படும் என்பதை உணர முடிகிறது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காணிநிலத் திட்டத்திற்கு 2,73,000 சதுர அடி ஒதுக்கீடு செய்யப்பெற்றுள்ளது. பாரதியைப் பரவலாக்கம் செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் மகாகவி பாரதியார் உயராய்வு மையத்தின் அருகில் பாரதிக்கு எல்லா நிலையிலும் துணைநின்ற செல்லம்மாள் பாரதி பெயரில் கலையரங்கம் ஒன்றைக் கட்டுவதற்கான அனுமதியைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். செல்லம்மாள் பாரதி கலையரங்கம் கட்டுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன்’ என்று உறுதி மொழிந்து பேசினார்.