நடப்போம்! நலம் பெறுவோம்! நடைபயிற்சி திட்டம் கோவையில் துவக்கம்

நடப்போம் ! நலம் பெறுவோம் ! திட்டத்தின் கீழ் கோவை பந்தைய சாலையில் நடைபயிற்சியை தமிழக வீட்டு வசதி வாரியம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நடப்போம் ! நடைபெறுவோம் ! திட்டத்தை சென்னையில் இருந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 8 கிலோ மீட்டர் நடைபயற்சி மேற்கொண்டு துவக்கி வைத்தார்.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காணொலி மூலம் துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி கொடியசைத்து நடைபயிற்சியை துவக்கி வைத்தார்.

இந்த நடைபயிற்சி ரேஸ்கோர்ஸ், திருச்சி சாலை, வாலாங்குளம் வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் ரேஸ்கோர்ஸ் பகுதியை வந்தடைந்தது.

இந்த நடைபயிற்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், துணை மேயர் வெற்றிசெல்வன், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.