பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தைக்கு அறுவை சிகிக்சை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சாதனை

இருதயத்தில் அசாதாரண ஒலி, மூச்சுத் திணறல், தாய்பால் உட்கொள்வதில் சிரமம் ஆகிய பிரச்சினைகளுடன் இரண்டுமாத குழந்தை மோதிராஜ், கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மேற்கூறிய பிரச்சினைகள் இதய செயலிழப்பின் அறிகுறிகள். இது பிறவியிலேயே ஏற்படும் அரிய வகை இதயக் கோளாறு ஆகும். அப்படிப்பட்ட குழந்தைக்கு மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:

குழந்தைகள் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் வினோத் துரைசாமி அக்குழந்தையைப் பரிசோதித்தார். எக்கோ பரிசோதனையில் குழந்தைக்கு கடுமையான பெருந்தமனி சுருக்கம் (ஸ்டெனோசிஸ்) இருந்தது தெரியவந்தது. இருதயத்தில் வழக்கமாக நான்கு அறைகளும் நான்கு வால்வுகளும் இருக்கும். வலதுபக்க அறைகளுக்கு வரும் அசுத்த இரத்தம், சுத்தப்படுத்துவதற்காக நுரையீரலை சென்றடைகிறது. அதன்பிறகு இடதுபுற அறைகளில் இருந்து பெருந்தமனி வழியாக இதயத்தில் இருந்து வெளியேறுகிறது. பெருந்தமனி என்பது முழு உடலுக்கும் சுத்தமான இரத்தத்தை சப்ளை செய்யும் ஒரு முக்கிய இரத்த நாளமாகும். இதில் கடுமையான அளவு அடைப்பு ஏற்படுவதால் சுத்தமான இரத்தம் உடலுக்கு செல்வது தடைபடுகிறது. இதை உடனடியாகக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது உயிருக்கே ஆபத்தாய் முடியும்.

இதுபோன்ற நிலையில் அறுவை சிகிச்சை ஒன்றே குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்கு உள்ள ஒரே வழி, பொதுவாக இதயத்தை திறந்து அறுவை சிகிச்சை (ஓபன் ஹார்ட்) செய்வதே வழக்கம். ஆனால் அதில் பின்விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் நீண்ட நாள் இருக்கவேண்டி வரும் மற்றும் தழும்பும் ஏற்படும். அதனால் டாக்டர் வினோத் துரைசாமி தலைமையின் கீழ் இருதய சிகிச்சை ஆலோசகர் டாக்டர் பாலகுமாரன், மயக்கவியல் நிபுணர் டாக்டர் சிவகுமார், குழந்தைகள் இன்டன்சிவிஸ்ட் நிபுணர் டாக்டர் முல்லை பாலாஜி ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் பலூன் அயோர்டிக்  வால்வுலோபிளாஸ்டி என்ற சிறப்பு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

இதன் மூலம் குழந்தையின் இடுப்பு பகுதி நாளங்கள் வழியாக பெருந்தமனி வால்வில் பலூன் பொருத்தப்பட்டு அதை விரியச் செய்து அடைப்பு நீக்கப்பட்டது. அதன் பிறகு உடல் நிலை தேறிய குழந்தை அடுத்த நாளே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து ஐந்து வாரங்கள் ஆகிய நிலையில் தற்போது அக்குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

திறமையுடனும் விரைவாகவும் செயல்பட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி பாராட்டினார். பிறந்த குழந்தைகளுக்கு இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்யும் மருத்துவமனைகளில் கே.எம்.சி.ஹெச். முன்னிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.