விநாயகருக்கு வணக்கம் செலுத்திய ஒற்றை காட்டு யானை

வீட்டின் கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து மாட்டுத்தீவனங்களை தின்று சென்ற காட்டு யானை வீட்டின் முன்பு இருக்கும் விநாயகர் சிலைக்கு வணக்கம் செலுத்தி விட்டு சென்றது.

கோவை மாவட்டம் வடவள்ளி, தடாகம் மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மையில் அதிகரித்துள்ளது. அண்மை காலங்களாக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. ஊருக்குள் புகும் காட்டு யானைகள் அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன. சில சமயங்களில் மாடுகளுக்காக வைக்கப்பட்டுள்ள தீவனங்களையும் தின்று விட்டு சென்று விடுகின்றன. அதுமட்டுமின்றி வீடு ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் சேதப்படுத்தி சென்று விடுகின்றன.

இந்நிலையில் கோவையில் ஆலாந்துறையை அடுத்த காருண்யா நகர் பகுதியில் சத்வா அவென்யூ உள்ளது. இங்கு வழக்கறிஞர் ஜெய்குமார் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அதனுள்ளேயே மாட்டு கொட்டகையும் உள்ளது. இந்த வீட்டிற்கு இரண்டு நுழைவாயில் கேட்கள் உள்ள நிலையில் இரவு நேரத்தில் வந்த ஒற்றை காட்டுயானை, சின்ன கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து மாட்டுக்கொட்டகையில் மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தீவனங்களை தின்று உள்ளது. யானை வந்ததால் தெரு நாய்கள் குலைக்கும் சத்தம் கேட்டும் கேட்டை உடைக்கும் சத்தம் கேட்டும் வீட்டில் இருந்து வெளியில் வந்த ஜெய்க்குமார் டார்ச் அடித்து பார்க்கும் போது ஒற்றை காட்டு யானை மாட்டுக்கொட்டகையில் இருந்த பொருட்களை தின்று கொண்டிருந்துள்ளது.

பின்னர் தொடர்ந்து டார்ச் லைட் அடிக்கவே அங்கிருந்த மற்றொரு கேட்டை உடைத்து கொண்டு வெளியேறியது. மேலும் வெளியேறும் போது வீட்டின் முன்பக்க சுற்றுசுவரில் பொறிக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலையை பார்த்து தும்பிக்கையை தூக்கி வணக்கம் செலுத்துவது போல் சைகை செய்து விட்டு சென்றது.

இச்சம்பவம் ஜெய்க்குமார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான நிலையில் தற்போது அக்காட்சிகள் வெளியாகி உள்ளது. இதே போன்று 2018ம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் இங்கு வந்த யானையும் வினாயகரை பார்த்து தும்பிக்கையை தூக்கி வணக்கம் செலுத்துவது போல் சைகை செய்து சென்றது குறிப்பிடத்தக்கது.