கல்வி ஒருவரை மனிதனாக மாற்றும்

-நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன்

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக செயலாளர் பிரியா சதிஷ்பிரபு பட்டமளிப்பு விழாவினை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கோகிலவாணி வரவேற்புரை மற்றும் ஆண்டு உரையை வழங்கி கல்லூரியின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பட்டம் பெற்ற அனைத்து பட்டதாரிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு பாராட்டும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார். எதிர் காலத்தில் சமுதாயத்தில் சிறப்பான இடத்தை பெற்று சிறந்து விளங்க வாழ்த்தினார். மேலும் மாநில அளவில் தர வரிசையில் இடம் பிடித்த பட்டதாரிகளை நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தார். ஆசிரியர்களின் சேவையையும் பாராட்டினார் மற்றும் கல்வி ஒருவரை அறிவாளியாக மட்டுமல்லாமல் மனிதனாக மாற்றும் என்பதையும் தெரிவித்தார். இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் முதன்மைக் கல்வி அதிகாரி கருணாகரன் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்விற்கு பெங்களூர், டெலாய்ட் நிறுவனத்தின் இணை இயக்குனர் பிரசன்ன கணபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அனைத்து பட்டதாரிகள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி தனது உரையை தொடங்கினர். உங்கள் கனவு வீண் போகவில்லை. இந்த பட்டத்தினை பெற்றதால் உங்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருந்தாதீர்கள், வருந்தும் நேரத்தில் உங்கள் திறமையை வளர்த்து கொள்ளுங்கள்.

மேலும் பட்டத்தை பெற்றவுடன் கற்பதை விட்டுவிடக்கூடாது, கற்றது கை அளவு மட்டுமே திறமையை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் மனதை வளப்படுத்தி செல்ல இருக்கும் பாதையை பெரியதாக தேர்ந்தெடுங்கள். அடுத்து வரும் தலைமுறைக்கு ஒரு முன் உதாரணமாக இருந்து, எதற்காக வாழ்கிறோம் என்று தெரிந்து வாழுங்கள் எனக் கூறினார்.

விழாவில் 200 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. மாநில அளவில் சிறந்த இடம் பிடித்த 6 மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.