சங்கரா கல்லூரியில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகுகள் 1 மற்றும் 2 சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை தனம் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் வி.ராதிகா தலைமையுரையாற்றி, சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளரும், ஆலோசகருமான அமுதராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்தும், உறவினர்கள் மற்றும் உறவினர்கள் அல்லாதவர்களுக்கு உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், மாற்று அறுவை சிகிச்சையின் காலம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் குறித்தும் விளக்கினார். உடல் உறுப்பு தானத்திற்கு கடைபிடிக்க வேண்டிய அத்தியாவசியங்கள் மற்றும் நடைமுறைகளை அவர் வலியுறுத்தினார்.

மனித உயிர்களைக் காப்பாற்றுவதன் மூலம் சட்ட நடைமுறைகள் மற்றும் சமூக பொறுப்பை மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சி உணர்த்தியது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 450 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் எஸ்.பரத், பி.ராமச்சந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட உறுப்பினா்கள் வான்மதி, புவனேஸ்வரி ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.