கோ-ஆப்டெக்ஸ் சார்பில் கே.ஐ.டி. கல்லூரியில் கைத்தறி விழிப்புணர்வு

கைத்தறி ரகங்கள் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி சட்டப்பேரவையில் அறிவித்தபடி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் (கே.ஐ.டி) கைத்தறி துறை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் சார்பாக கைத்தறி பற்றிய விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான பட்டுப் புடவைகள், பருத்திப் புடவைகள், புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி ரகங்கள், ஹோம் டெக்ஸ்டைல்ஸ் ரகங்கள், நாகரீக பைகள், துப்பட்டாக்கள் போர்வைகள், தலையணை உறைகள் மற்றும் துண்டுகள் முதலிய துணிவகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும், மாணவர்களுக்கு கைத்தறியின் சிறப்பினை அறிமுகப்படுத்தும் நோக்கில் கைத்தறி துணிகள் கண்காட்சியும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி துணைத்தலைவர் இந்து முருகேசன், கண்ணம்பாளையம் டவுன் பஞ்சாயத்து தலைவர், கோ-ஆப்டெக்ஸ் பொது மேலாளர் வாசு, மண்டல மேலாளர் நந்தகோபால், கைத்தறித் துறை உதவி இயக்குனர் சிவக்குமார், துறை சார்ந்த அதிகாரிகள், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.