வருவாய் புலனாய்வுத் துறையில் சிறப்பாக பணியாற்றிய 2 பேருக்கு ஜனாதிபதி விருது

வருவாய் புலனாய்வுத் துறையில் திறம்பட பணிபுரிந்த, கோவையை சேர்ந்த இருவருக்கு, ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.கோவை மண்டல வருவாய் புலனாய்வு பிரிவில், பெட்ரிக் சத்குரு தாஸ் மற்றும் மகேந்திரன் ஆகியோர் முறையே, முதுநிலை புலனாய்வு பிரிவு அலுவலர் மற்றும் புலனாய்வு பிரிவு அலுவலராக பணிபுரிந்தனர்.

தற்போது இவர்கள் கோவை ஜி.எஸ்.டி., இயக்குனரகத்தில், கண்காணிப்பாளர், ஆய்வாளராக பணிபுரிந்து வருகின்றனர். இருவரும், வருவாய் புலனாய்வு துறையில் பணிபுரிந்த போது, வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்ததில் பெரும்பங்கு வகித்தனர்.

துறையில் இருவரும் திறம்பட பணிபுரிந்ததை பாராட்டி, குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது.கடந்த, 21ம் தேதி கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவருக்கும் விருதுகளை வழங்கினார்.

இருவருக்கும் பதக்கம் மற்றும் ஜனாதிபதியின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதேபோல், ஜி.எஸ்.டி., தினத்தை முன்னிட்டு, கடந்த 1ம் தேதி டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், கோவை மண்டல ஜி.எஸ்.டி., புலானய்வு பிரிவு தலைமை இயக்குனரகத்தில் பணிபுரிந்து வரும், நிர்வாக அலுவலர் டேனியல் அற்புதராஜ் என்பவருக்கும், திறம்பட பணிபுரிந்தமைக்கான விருது வழங்கப்பட்டது.