பள்ளிக் கழிவறைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

கோவையில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து ”நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” மாநாடு செவ்வாய்கிழமை நவஇந்தியாவில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி அறக்கட்டளையின் தலைவர் வேணு சீனிவாசன், பள்ளி கல்வி துறை அரசின் முதன்மை செயலர் காகர்லா உஷா, சி.ஐ.ஐ தலைவர் சங்கர் வானவராயன், சி.ஐ.ஐ கோவை மண்டல தலைவர் செந்தில் கணேஷ், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப், மற்றும் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி அறக்கட்டளையின் உறுப்பினரான சுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பள்ளி கல்வி துறை அரசின் முதன்மை செயலர் காகர்லா உஷா வரவேற்புரையாற்றி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்த்து நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி அறக்கட்டளையின் தலைவர் வேணு சீனிவாசன் தலைமையுரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், ஒவ்வொரு பள்ளிகளிலும் தூய்மையான வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், கழிப்பறைகள் இருக்க வேண்டும் என்றார். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பறைகள், வீடு வாசல்கள் போல் தூய்மையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்வில் அரசு பள்ளிகளை மேம்படுத்தவும், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி அறக்கட்டளையின் தரத்தை உயர்த்தவும் கோவை மண்டலத்தில் அமைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் 13 கோடி 25 லட்சம் சிஎஸ்ஆர் நிதியினை அமைச்சரிடம் வழங்கினார்
இதனைத்தொடர்ந்து, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது, இந்த நிகழ்வானது ஏறி வந்த படியை மறக்காமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைப்பதற்கான ஒன்றாகும். இன்று தொண்டாமுத்தூர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு இந்த நிகழ்விற்கு வந்துள்ளேன். கழிவறைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

நான் எங்கு சென்றாலும் கழிவறையை ஆய்வு செய்யாமல் இருப்பது இல்லை.  தமிழக முதல்வர் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தை டிசம்பர் 2022, சென்னையில் தொடங்கி வைத்தார். நிறுவனங்கள் இன்று செய்யும் முதலீடு ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கான முதலீடு. முதலமைச்சர் மருத்துவம் மற்றும் கல்வியை இரு கண்களாக கருதுகிறார்.

இந்நிலையில் உயர்கல்விக்கான ஒரு முக்கிய தளமாக கோவை உள்ளது. தொழில் நிறுவனங்களுக்கான துவக்கம் முதலில் பள்ளி கல்வித்துறையில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.
சமூக அக்கறை கொண்ட மனிதனாக இருப்பது தான் மனித நேயம். 13.95 கோடி கோவையில் பங்களிப்பாக தனியார் தொழில் முனைவோர் வழங்கியுள்ளீர்கள்.

நான் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது கையில் கொண்டு போவது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி குறிப்பேடு. பங்களிப்பு கொடுக்கும் நபர்கள் நாங்கள் திட்டத்தை எப்படி செய்தோம் என்பதை பார்த்து தங்களின் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையை கோவை கைவிடாது. தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்குங்கள், இவ்வாறு பேசினார்.

இறுதியில், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி அறக்கட்டளையின் உறுப்பினரான சுதன் நன்றியுரை வழங்கினார். மேலும், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது..
‘தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இத்திட்டத்தின் வாயிலாக 7294 பள்ளிகளுக்கு என்னென்ன தேவைகள் உள்ளது என கேட்டறிந்து அவை சென்றடைந்திருக்கின்றன. இதனை தொடர்ந்து நாம் அதிக படுத்த வேண்டும்.

கோவை மண்டலத்தில் இருக்கின்ற தொழில் அமைப்புகளுடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு தொழில் நிறுவனத்தின் உரிமையாளர்கள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இன்று மட்டும் ரூ.13.95 கோடி பங்களிப்பு வந்துள்ளது. இதனை கொண்டு ஒவ்வொரு பள்ளியையும் மேம்படுத்த வேண்டும்.

அரசாங்கத்தினுடைய இந்த திட்டத்தினை ஊடகவியலாளர்கள் வெகுவாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’ , என்றார்.