பெண்களுக்கான சைபர் கிரைம் குற்றம் கனிமொழி எம்பி பங்கேற்பு

தேசிய வலைதள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் (National cyber security research council) மற்றும் மாநில மகளிர் ஆணையம் சார்பில் கோவை அவிநாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் டெக்ஸ்டைல் கல்லூரி அரங்கில் ‘பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம்’ தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடைபெற்று வருகிறது.

இதன் துவக்க நிகழ்வில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், தேசிய வலைதள பாதுகாப்பு ஆராய்ச்சி மைய இயக்குனர் காளிராஜ், மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பெண்கள் பாதுகாப்பு குறித்து உரையாற்றினர்.

பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய கனிமொழி,

‘நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக பெண்களின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மிகப்பெரும் வளர்ச்சியை கண்டு வருகிறது.

குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அச்சுறுத்தல்கள் அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் உதவியோடு மேலும் பூதாகரமாக மாறி உள்ளது.

செயர்க்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பத்தின் அபாயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது கல்வித் திட்டத்தில் பெண்களை சமமாக மதிக்க வேண்டும் எனவும் பெண்களுக்கும் எல்லா உரிமையும் உள்ளது என்பதையும் சாதி வேற்றுமை கூடாது என்பதையும் நாம் கற்றுக் கொடுப்பதில்லை.

அதுவே, உனக்கு என்ன நடந்தாலும் நீ தான் பொறுப்பு என பெண்களிடம் கூறுகிறோம்.

வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப சூழலில் நாம் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இணையத்தில் ஒரு தகவல் பகிரப்பட்டால் அதை நீக்க முடியாது என்கிற ஒரு பயம் எல்லோருக்கும் உள்ளது. ஆனால் இணையத்தில் உள்ள அந்த தகவலை நீக்க முடியும் என்கிற ஒரு முக்கியமான விஷயம் இந்த கருத்தரங்கில் பகிரப்பட்டுள்ளது.

இது போன்ற கருத்தரங்கின் மூலம் பெண்கள் பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது அவசியம்.

பெண்கள் ஒரு கருத்தை வெளியிடும்போது அவர்கள் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் தொடுக்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் உங்களது கேள்விகளை, சந்தேகங்களை தயங்காமல் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், இங்கு பேசுபவர்களுக்கும் பெண்கள் குறித்த புரிதல்கள் ஏற்பட இந்த கருத்தரங்கம் நல்ல வாய்ப்பாக அமையும்’ என பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கனிமொழி,

‘காவல்துறையினர் பெண்கள் புகார் அளிக்க வரும்போது அவர்களை சரியாக நடத்த வேண்டும். நாடு முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு சைபர் கிரைம் குறித்த புரிதல் வேண்டும்.

காவல்துறையினர் மட்டுமின்றி பெற்றோர்களும் பெண் குழந்தைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் மீது குற்றம் சுமத்தாமல், அவர்களை பாதுகாப்பதே முதல் நோக்கமாக இருக்க வேண்டும்.

பெண்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்த கருத்தரங்கம் மிக முக்கியமானது.

எந்த ஒரு கருத்துக்கும் எதிர்வினை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று தான். ஆனால் அதைத் தாண்டி ஆபாசமான கருத்தை சொல்வது, வேறு விதமாக கொச்சைப்படுத்துவது ஆகியவை மேடையாக இருந்தாலும் இணையமாக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது’ என தெரிவித்தார்.

முன்னதாக, இன்று காலை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து பெண் ஓட்டுனர் ஷர்மிளா என்பவரை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, பேருந்திலும் பயணம் செய்தார்.