சச்சிதானந்த பள்ளியில் ‘உலக யோகா தினம்’ கொண்டாட்டம்!

கோவை, கல்லாறு பகுதியில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் புதன்கிழமை காலை 6.00 மணியளவில், ‘உலக யோகா தினம்’ கொண்டாடப்பட்டது. உடல் நலனையும் மன நலனையும் வளர்ப்பதற்கு உதவுகின்ற யோகக் கலையை அனைத்து வயதினரும் பின்பற்றிப் பயன்பெறுகின்ற வகையில் ‘உலக யோகா தினம்’ ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிச் செயலர் கவிதாசன் பேசுகையில், “நம் பள்ளியின் நிறுவனர் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் உலகம் முழுவதும் யோக நெறியைப் பரவச் செய்ததுடன், வாழ்க்கையின் அமைதியான சிறப்பினை உலகிற்கு உணர்த்தியவர். ‘ஒருங்கிணைந்த யோக மையங்களை’ (Integral Yoga Institutes) உலகமெங்கும் நிறுவி, ஆன்மிக யோக சேவையைச் செய்தவர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் யோக நெறிகளை இளம் வயதிலே மாணவ மாணவியர் கற்றுக் கொண்டு, யோகாசனப் பயிற்சியினை நாள்தோறும் செய்வதன் மூலம், நல்ல உடல் நலம், வலிமையான மனம், நீண்ட ஆயுள் ஆகியனவற்றைப் பெறலாம். சுவாமிகள், ‘அன்பு, சேவை நம் பணி அதற்கே உன்னை அர்ப்பணி’ என்றார்.

யோகப் பயிற்சி நம்மை மற்றவர்களுக்காக அர்ப்பணிக்கின்ற மனப்பக்குவத்தைப் பெறச்செய்கின்றது. யோகாசனம் உடலையும் மனத்தையும் ஆன்மாவையும் ஒருங்கிணைக்கின்றது. மனம் ஒருநிலைப் படுத்தப்படுகின்றபோது, நம்மால் ஒரு செயலைச் சிறப்பாகச் செய்துகாட்ட முடியும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகின்றது. நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள உதவுகின்றது.

உடல் உறுதியாக இருந்தால் உள்ளம் உறுதியாக இருக்கும். நம் வாழ்நாள் முழுவதும் நம்மோடு துணைாக இருக்கின்ற உடலினை நல்ல நிலையில் வைத்திருக்க யோக உதவுகின்றது. இன்று நாம் கொண்டாடுகின்ற ‘உலக யோகா தினம்’ நமக்கு அமைதியையும், நல்வழியையும், உடல் ஆரோக்கியத்தையும் வலியுறுத்துகின்றது. எனவே, மாணவ மாணவியர் அனைவரும் யோகப் பயிற்சியினைத் தொடர்ந்து செய்து வாழ்வில் உயர வேண்டும்.”என்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், பள்ளியில் பயிலும் அணைத்து மாணவ மாணவியரும், ஆசிரியர்களும் யோகப் பயிற்சியினை மேற்கொண்டனர். பள்ளி முதல்வர் உமா மஹேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டும் பராமரிப்புத் துறையை சார்ந்த கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.