திருமணம் ஆனவரை பெண் கேட்டுச் சென்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு ! அதிமுக பிரமுகர் – மனைவி கைது!

கோவை, ராமநாதபுரம் கருப்பண்ண தேவர் வீதியை சேர்ந்தவர் வீரகுமார் (வயது 33). இவர் திருமண நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். கருத்துவேறுபாடு காரணமாக வீரகுமார் கடந்த 3 மாதங்களாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இவர் கோவை ராமநாதபுரத்தில் நடந்த காதணி விழாவுக்கு அலங்காரம் செய்வதற்காக சென்றார்.

அப்போது, வீரகுமாருக்குத் திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் அக்கம்பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு வடவள்ளி அருகே ஆண்டிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார்.

இளம்பெண் தனது பெற்றோரிடம் வீரக்குமாருடன் சேர்ந்து வாழ போவதாக கூறியுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று வீரகுமாரை தொடர்பு கொண்ட இளம்பெண் தன்னை திருமணம் செய்வது தொடர்பாக தனது பெற்றோரிடம் வந்து பேசுமாறு அழைத்தார்.

அதன்படி அவர் தன்னுடன் வேலை பார்க்கும் ராம்குமார், சதீஷ்குமார் ஆகியோருடன் ஆண்டிபாளையத்தில் உள்ள இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அவரது பெற்றோரை சந்தித்த வீரகுமார், உங்கள் மகளை எனக்கு 2 – வதாக திருமணம் செய்து வையுங்கள் என கேட்டுள்ளார். இது இளம்பெண்ணின் பெற்றோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வீரகுமாரை கண்டித்தனர். இதனால் 2 தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது வீரகுமார், இளம்பெண்ணின் தந்தையை தாக்க முயன்றார்.

இதனை பார்த்த இளம்பெண்ணின் தாய் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வீரகுமாரின் மண்டையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வீரகுமாரை தாக்கியது இளம்பெண்ணின் தந்தையான சுப்பிரமணியம் (65), அவரது தாயார் தங்கமணி (57) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடை த்தனர். கைதான சுப்பிரமணியம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். அவர் வேடப்பட்டி பகுதி அ.தி.மு.க. நிர்வாகியாக உள்ளார்.