பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா எப்பொழுது? 2 லட்சம் மாணவர்கள் காத்திருப்பு.

பாரதியார் பல்கலையில் பட்டமளிப்பு விழா தாமதமாவதால், இளநிலை, முதுநிலை முடித்த 1.85 லட்சம் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.பட்டம் முடித்து மூன்று மாதங்களில் மாணவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நடத்தி, சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

அதை வைத்தே உயர்கல்வி சேர்க்கை, வேலைவாய்ப்பு, பிற அரசு தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்க இயலும்.தற்காலிகமாக வழங்கப்படும், ‘புரொவிஷனல்’ சான்றிதழ் ஓராண்டு மட்டுமே செல்லத்தக்கது. ஆனால், அதன் வாயிலாக, வெளிநாட்டு கல்வி, வேலைவாய்ப்புகளில் சேர இயலாது.பாரதியார் பல்கலையின் கீழ், 2020-21ம் கல்வியாண்டுக்கான பட்டமளிப்பு விழா, 2022 மே 13ம் தேதி நடத்தப்பட்டது.

அதன் பின், 2021-22 கல்வியாண்டுக்கான பட்டமளிப்பு விழா இதுவரை நடத்தப்படவில்லை. நடப்பு கல்வியாண்டில், ஒரு லட்சம் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறியுள்ளனர்2021-22 மற்றும், 2022-23 கல்வியாண்டில் பட்டம் முடித்த, 1.85 லட்சம் மாணவர்கள் சான்றிதழ்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2021-22ல் முடித்த மாணவர்கள் பலர், வெளிநாடுகளில் உயர்கல்வியை தொடர முடியாமலும், பிற பல்கலைகளில் சேர முடியாலும், வேலை வாய்ப்புகளில் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியாமலும், கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.பல்கலையில் நேற்று நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், இது குறித்து எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை.

பெயர் வெளியிட விரும்பாத, பல்கலை நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘பட்டமளிப்பு விழா நடத்த, பல்கலை நிர்வாகம் தயாராக உள்ளது. ஆனால், துணைவேந்தர் நியமனம் குறித்து, மாநில அரசு தரப்பில் எவ்வித பதிலும் இல்லை’ என்றார்.