அமித்ஷா நாளை தமிழகம் வருகை ..சென்னை வேலூர் கூட்டங்களில் பங்கேற்பு.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்கு அனைத்து மாநிலங்களிலும் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

அதே நேரத்தில் மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநில கட்சிகள் மற்றும் தங்களுக்கு சாதகமாக உள்ள பாராளுமன்ற தொகுதிகளை குறி வைத்து இப்போதே பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறது.

இதன்படி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான மத்திய மந்திரி அமித்ஷா வியூகம் வகுத்து உள்ளார். இது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவதற்காக அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதற்கு முன்பு போட்டியிட்ட இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் களம் இறங்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் வகையிலேயே அமித்ஷாவின் சென்னை பயணம் அமைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து விமானத்தில் இன்று இரவு 9 மணி அளவில் அமித்ஷா சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் அவர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் தங்குகிறார்.

அங்கு வைத்தே அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். அதே நேரத்தில் பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

எந்த மாநிலத்துக்கு சென்றாலும் நள்ளிரவு வரை பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவது அமித்ஷாவின் வழக்கம். அந்த வகையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா நள்ளிரவு 2 மணி வரை நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

இதன் பின்னர் நாளை 2 கூட்டங்களில் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதில் ஒன்று பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம். இன்னொன்று பொதுக்கூட்டமாகும். தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் கோவிலம்பாக்கத்தில் உள்ள ராணி மகால் மண்டபத்தில் வைத்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

அங்கு சுமார் ஒரு மணி நேரம் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் அமித்ஷா பின்னர் கிண்டி ஓட்டலுக்கு சென்று தங்குகிறார். மாலையில் வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

இதற்காக நாளை பிற்பகலில் அமித்ஷா ஹெலிகாப்டரில் வேலூருக்கு செல்கிறார். பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டமாக நடைபெற உள்ள வேலூர் கூட்டத்தில் பேசும் போது பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக மத்தியில் ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு பாரதிய ஜனதா கட்சி திட்டம் போட்டு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

மாநில அளவில் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்களுக்கு தேவையான, செல்வாக்கு மிக்க தொகுதிகளை கேட்டுப்பெற்று வெற்றி பெற வேண்டும் என்பதே அமித்ஷாவின் இலக்காக உள்ளது. குறிப்பாக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்கிற நிலையில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களில் தென் சென்னை போன்ற பாராளுமன்ற தொகுதிகளை கேட்டு பெற்றால் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் என்பதும் அமித்ஷாவின் கணக்காக உள்ளது. தென்சென்னை தொகுதியில் இதற்கு முன்பு பாரதிய ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் தனித்து போட்டியிட்டு 1 லட்சம் ஓட்டுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று வேலூரிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக அக்கட்சியினர் கூறி வருகிறார்கள்.

இதன் காரணமாகவே சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை வேலூரில் நடத்துவதற்கு பாரதிய ஜனதா மூத்த நிர்வாகிகள் முடிவு செய்து கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு உள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமி தற்போது சேலத்தில் உள்ள தனது வீட்டில் கால் வலிக்காக சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வருகிறார்.

அவர் இன்று மாலை அல்லது நாளை காலையில் அமித்ஷாவை சந்தித்து பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்பான உறுதியான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

ஓ.பன்னீர்செல்வமும் அமித்ஷாவை சந்தித்து பேசுவாரா? என்பதும் இன்னும் உறுதிப்படுத்தப்படாமலேயே உள்ளது. பாராளுமன்ற தேர்தல் பணிக்காக அமித்ஷா முன் கூட்டியே ஆலோசனை கூட்டங்களை தமிழகத்தில் மேற்கொள்வது அரசியல் களத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேகத்தை காட்டுவதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்