டீசல் விலை உயர்வால், லாரி வாடகை உயர்வு- அத்யாவசியப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு!

டீசல் விலை கடந்த இரண்டு மாதத்தில் 6 ரூபாய் 81 காசுகள் அதிகரித்துள்ளது. தொடர்ந்து விலை ஏற்றம் காரணமாக சரக்கு லாரி வாடகை கட்டணத்தை உயர்த்துவது பற்றி சரக்கு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் ஆலோசனை நடத்தியது. இதன் அடிப்படையில் நேற்று முதல் லாரி வாடகை 22 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.  இதன்மூலம் சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 ஆயிரத்து 500 ரூபாயாக வசூலிக்கப்பட்ட சரக்கு வாடகை கட்டணம் 10 ஆயிரமாகவும், இதேபோல் வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளுக்கு வாடகை 25 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் ராஜவடிவேல் தெரிவித்தார். இதனால் அத்யாவசியப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்து உள்ளனர்.