டாக்டர்.ஆர்.வி. கலை கல்லூரியில் பரிசளிப்பு நிகழ்ச்சி

காரமடை, டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் திங்கட்கிழமை தமிழ்த்துறை மற்றும் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சார்பாக ‘இணையவழி வினாடி வினாப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு’ நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் ஜெயந்தி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமை உரையாற்றினார்.

கோவை, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தேர்வு துணைக்கட்டுப்பாட்டு அலுவலர் சுவாமி புத்திதானந்தா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “உலக வரலாறு என்பது சாதித்தவர்களின் வரலாறு. சாதிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல. தாய், தந்தைக்கு அடுத்தபடியாக காலத்தையும், நேரத்தையும் மதிக்க வேண்டும். காலம் பொன் போன்றது. அதனை வீணாக்கக் கூடாது. அனைத்து ஆற்றலும் நமக்குள் இருக்கிறது.

மாணவர்கள் கல்வி கற்பது மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்காகவே. நாம் சம்பாதிக்கும் பணம் நல்ல வழியில் வருவதாக இருக்கவேண்டுமே தவிர தீய வழியில் வருவதாக இருக்கக் கூடாது. மொபைல் போன் உபயோகம் இளைஞர் சமுதாயத்திடம் இன்று அதிகரித்து வருகிறது. இதனால் மூளையின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க வேண்டும். தீயதும், நல்லதும் பிறரால் வருவதில்லை. நம்மால்தான் வருகிறது” பேசினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் வினாடி வினாப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாணவர் சேவை மையத்தின் தலைவர் கந்தப்பன் பங்கேற்றார்.