யமஹா இரு சக்கர வாகனத்தின் மைலேஜ் சேலஞ்ச்

கோவை கொடிசியா வளாகத்தில் யமஹா, இரு சக்கர வாகனத்தின் மைலேஜ் சேலஞ்ச் செயல்பாடு குறித்த, சோதனை ஒட்ட முயற்சியில் அதிகபட்சமாக அஷ்வின் குமார் என்பவர் 128 கிலோமீட்டர் தூரம் பைக் ஒட்டி முதல்பரிசை தட்டி சென்றுள்ளார்.

இரு சக்கர வாகன நிறுவனமான யமஹாவின் பேசினோ, யமஹா ரே, ஸ்ட்ரீட் ரேலி ஆகிய வாகனங்கள் எந்த அளவிற்கு மைலேஜ் கொடுக்கின்றன என்பது குறித்த சோதனை முயற்சி கோவையில் நடைபெற்றது. கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற இந்த  நிகழ்ச்சியில் யமஹா வாகனங்களை இயக்கி வரும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் சுமார் 30 கிலோமீட்டர் வரை சென்று மீண்டும் கொடிசியா பகுதியில் தங்களது பயணத்தை நிறைவு செய்தனர். முன்னதாக வாகனத்தின் தன்மையை யமஹா நிறுவனத்தின் மெக்கானிக்குகள் சோதித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த வாகனங்களில் முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நிலையான வேகத்தில் வாகனங்களை இயக்கினர். 30 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுவிட்டு மீண்டும் கொடிசியா மைதானத்தை அடைந்தவர்களின் வாகனங்களில் உள்ள எரிபொருள் அளவு பரிசோதனை செய்யப்பட்டு வாகனத்தின் மைலேஜ் சோதனை செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், அஷ்வின் குமார் என்பவர் ஒரு லிட்டர் பெட்ரோலில் 128 கிலோ மீட்டர் தூரம் ஒட்டி முதல் பரிசை தட்டி சென்றார். இரண்டாவது பரிசை அருள்குமார் என்பவர் பெற்றார். இவர் ஒரு லிட்டர் பெட்ரோலில் 122, கிலோமீட்டர் தூரமும், மூன்றாம் பரிசு பெற்ற ரபிக் என்பவர் 115 கிலோமீட்டர் தூரமும் வாகனத்தை இயக்கியுள்ளார்.

இவர்களுக்கு யமஹா நிறுவனம் சார்பில் சிறப்புப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.