ஜெயின் அகில உலக வர்த்தக அமைப்பின் சார்பில் அகிம்சா மராத்தான்

ஜிடோ என்ற ஜெயின் அகில உலக வர்த்தக அமைப்பானது கல்வி, பொருளாதார முன்னேற்ற, சமூக சேவை என்ற மூன்று இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு உலகம் முழுவதும் 26 சர்வதேச கிளைகளும் இந்தியாவில் 68 கிளைகளும் உள்ளன.

இதன் மகளிர் பிரிவானது கல்வி, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டுவருகிறது இந்த அமைப்பின் சார்பாக உலகம் முழுவதும் 22 நாடுகளிலும் இந்தியாவில் 65-க்கும் மேற்பட்ட நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை அகிம்சா மராத்தான் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

சமாதானம், ஒற்றுமை, அன்பு ஆகியவற்றை பரப்புவதற்காகவும் உலக மக்கள் மேம்பாட்டுக்காவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உலகம் முழுவதிலும் அன்பும் சமாதானமும் நிலவுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். ஜிடோ அகிம்சா ஓட்டமானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

ஜிடோ மகளிர் பிரிவின் கோயம்புத்தூர் கிளையின் சார்பில் இந்த நிகழ்ச்சியானது ஞாயிற்றுக்கிழமை நேரு வித்யாலாயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி 3கி.மீ., 5 கி.மீ., 10 கி.மீ ஆகிய மூன்று பிரிவுகளில் நடைபெற்றது 1500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் 110 பட்டாலியன் கமாண்டர் அதிகாரி கர்னல் தினேஷ் சிங் தன்வர் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்ச்சியைக் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.

இந்திய தரைப்படை, கப்பல் படை, விமானப் படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த இராணுவத்தினர், காவல் துறையினர் மற்றும் ஜிடோ கோவை அமைப்பின் தலைவர் ராகேஷ்ஜி மேத்தா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கோவை ஜிடோ மகளிர் பிரிவின் தலைவர் பூனம் பாப்னா சிறப்புரை ஆற்றினார். கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மெடிக்கல் பார்ட்னராக கலந்துகொண்டு தேவையான மருத்துவ உதவியை வழங்கியது.