டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்

காரமடை, டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை வணிகவியல் துறை சார்பாக “மின் வணிகத்தில் டிஜிட்டல் நிதிச்சேவைகளை உள்வாங்குதல்” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரி முதல்வர் ரூபா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து வரவேற்புரையாற்றினார்.

எத்தியோபியா நாட்டின் ஆம்போ பல்கலைக்கழகத்தின் கூட்டுறவுத்துறையின் கணக்கியல் பேராசிரியர் தமிழரசு இணைய வழியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடக்க விழா உரையாற்றினார். அவர் பேசிய உரையில், “இந்திய குடிமக்களின் முன்னேற்றத்திற்காக கணினி, தொழில்நுட்பம் மற்றும் வங்கிச் சேவைகள் இணைந்து செயல்படுகின்றன. டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்த 2,92,000 கிராமங்களை இச்சேவைகள் இணைத்துள்ளன. இந்த டிஜிட்டல் நிதிச்சேவைகளை வங்கிச்சேவைகள் ஆதரிக்கின்றன.

சிறு மற்றும் குறு நிறுவனங்கள் தொடங்கும் பெண் தொழில் முனைவோருக்கு இவை உதவுகிறது. உலகம் முழுவதும் 26 ஆயிரம் டிஜிட்டல் நிதிச் சேவைகள் உள்ளன. செயல்படுவதற்கு இது மிகவும் எளிதானது மற்றும் பாதுகாப்பானது மற்றும் 24 மணி நேரமும் செயல்படக்கூடியது என்பதால் இதன் மூலம் தனிப்பட்ட நிதி மதிப்பீட்டை நாம் எளிதாக பயன்படுத்தலாம்” என்று பல கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இக்கருத்தரங்கின் முதல் அமர்வு கோவை, பி.ஆர்.அகாடெமி நிறுவனத்தின் இயக்குனர் ராஜசேகரன் உன்னி தலைவராகவும், இரண்டாம் அமர்வு உடுமலைப்பேட்டை, அரசு கலைக் கல்லூரியின் வணிகவியல் முதுகலை ஆராய்ச்சித் துறையின் உதவிப் பேராசிரியர், ஆராய்ச்சி ஆலோசகர் மற்றும் முதன்மை ஆய்வாளர் கதிர்வேல் தலைவராகவும் கொண்டு கருத்தரங்கில் பங்கேற்று பதிவு செய்தவர்களில் 20 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அன்றைய தினம் கருத்தரங்கு தொடர்பான புத்தக வெளியீடும் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில் கருத்தரங்கில் பங்கேற்ற பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் சான்றிதழ்கள் வழங்கினார்.