கே.எம்.சி.ஹெச் தலைவருக்கு சிறந்த சமூகநல பங்களிப்புக்கான உயரிய கெளரவம்

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவரான டாக்டர் நல்ல ஜி பழனிசாமி ஆற்றிவரும் சிறந்த சமூக நல சேவைகளை அங்கீகரித்து கெளரவிக்கும் விதமாக ரோட்டரி பவுண்டேஷன் அமைப்பு அவருக்கு உயரிய கெளரவ அங்கீகாரத்தை வழங்கியது.

டாக்டர் நல்ல ஜி பழனிசாமி ஒரு தொலைநோக்கு கொண்ட மருத்துவராக மட்டுமன்றி செயலாற்றல் மிக்க தொழிலதிபராகவும், கல்வியாளராகவும், சமூக சேவைகளில் ஈடுபாடு மிக்கவராகவும் பன்முகப் பரிமாணத்துடன் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையின் கீழ் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை ஏராளமான சமூகநலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கிராமப்புறங்களில் மகளிர் நல மையங்களை நிறுவியது, கிராம சுகாதார திட்டங்கள், கிராமப்புற பள்ளிகளின் கட்டமைப்புக்கு நிதியுதவி, தமிழக அரசின் கோவிட் நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடி நிதியுதவி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பிராஜக்ட் கதிர் திட்டம் மூலம் சிகிச்சைக்கான நிதியுதவி, மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப் உடன் இணைந்து பெண்கள் உடல் நலத்துக்காக இந்தியாவின் முதலாவது மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்று நோய்க்கான நடமாடும் மருத்துவ வாகனம் துவக்கம், மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ‘மை பிரெஸ்ட் ஆப்’ என்ற செயலி அறிமுகம், வலிப்பு நோய் விழிப்புணர்வு மாரத்தான், திருப்பூர் ரோட்டரி கிளப்புக்கு ஆம்புலன்ஸ் நன்கொடை முதலான பல்வேறு சமூக நல மேம்பாட்டு திட்டங்களை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை முன்னெடுத்து நடத்திவருகிறது

சமீபத்தில் நல்லாம்பட்டி கிராமத்தில் அரசு உயர் நிலைப் பள்ளியில் 24 அதிநவீன வகுப்பறைகளைக் கட்டுவதற்கு ரோட்டரி பவுண்டேஷனுக்கு கே.எம்.சி.ஹெச் ரூ. 2.11 கோடி வழங்கியுள்ளது. இத்திட்டமானது ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் மூலம் நிறைவேற்றப்படும்.

கெளரவிப்பு விழா கோவை அவினாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்சியில் நடைபெற்றது. அதுசமயம் ரோட்டரி இண்டர்நேஷனல் மாவட்டம் 3201 மாவட்ட கவர்னர் ராஜ்மோகன் நாயர், மாவட்ட இயக்குனர் மயில்சாமி, உதவி கவர்னர் சீதாராம், தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ரோட்டரி கிளப்பின் முக்கிய பிரமுகர்களும் நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.