தாலி கட்டி விட்டதால், யாரும் யாருக்கும் அடிமை கிடையாது!

– 81 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து அமைச்சர் உதயநிதி பேச்சு

கணவர் மனைவிக்கு தாலி கட்டி விட்டதால், யாரும் யாருக்கும் அடிமை கிடையாது என கோவை
சின்னியம்பாளையம் பகுதியில் தமிழக முதல்வரின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, 81 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை ஒட்டி, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் சின்னியம்பாளையத்தில் 81, ஜோடிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும், கழக செயற்திட்டக்குழு உறுப்பினருமான மு.கண்ணப்பன், முன்னாள் அமைச்சரும், கழக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி, மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் வரவேற்புரையாற்றினர். வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், தங்க தாலி, பட்டு புடவை, பட்டு வேஷ்டி, கட்டில், மெத்தை, பிரிட்ஜ், டிவி, 2 குத்துவிளக்கு, ஹாட்பாக்ஸ், மிக்ஸி, கிரைண்டர், சில்வர் குடம், சில்வர் பாத்திரம், தாம்பூழம், பீரோ உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: கணவர் மனைவிக்கு தாலி கட்டி விட்டதால், யாரும் யாருக்கும் அடிமை கிடையாது. இங்கு நடைபெற்றுள்ளது சுயமரியாதை திருமணம். சுயமரியாதை திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என போராடியவர், தந்தை பெரியார். அதனை வழிநடத்தியவர் பேரறிஞர் அண்ணா.

திருமணமானவர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் அடிமையாக இருக்கக்கூடாது. உங்களுடைய உரிமைகளை நீங்கள் கேட்டுப்பெற வேண்டும். அதிமுக – பாஜகவை போன்று இருந்துவிடாதீர்கள், ஒருவர் காலில் ஒருவர் விழுந்துவிடாதீர்கள்.

ஆசிப்பெற வேண்டுமென்றால் உங்களது பெற்றோர்கள் அல்லது மூத்தவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுங்கள். காலில் விழுந்தவர்கள் நிலைமை எல்லாம் தற்போது எப்படி இருக்கிறது என அனைவருக்கும் தெரியும். தவறு செய்திருந்தால் மனைவி, கணவன் காலில் விழலாம்; கணவன் மனைவி காலில் விழலாம், அதில் தவறில்லை. சண்டை வரத்தான் செய்யும். சண்டை இல்லாத குடும்பம் எங்கும் இல்லை. உங்களுக்குள் அந்த புரிதல் இருக்க வேண்டும்.

பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு சுத்தமான தமிழ்ப் பெயரை வையுங்கள். தற்போது இந்தி மொழி திணிக்கப்பட்டு வரும் நிலையில், நம்முடைய தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டுமெனில் இதுபோன்ற சிறு விசயங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

வீட்டில் அரசியல் பேசுங்கள், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது, இந்தியாவில் என்ன நடக்கிறது, ஒன்றிய அரசு என்ன செய்கிறது, தமிழ்நாடு அரசு சார்பில் தீட்டப்பட்டுள்ள திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.