ஜனாதிபதி நாளை கோவை வருகை போலீசார் பாதுகாப்பு ஒத்திகை தீவிரம்

கோவை ஈஷா யோகா மையத்திற்கு நாளை 18 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா நடக்க இருக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். ஜனாதிபதி கோவை வருகையை தொடர்ந்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி வருகையை அடுத்து, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில், 5,000 போலீசாரும், மாநகரில், 1,000 க்கும் மேற்பட்ட போலீசாரும் என 6000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்காக அண்டை மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கபட்டு ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் குடியரசு தலைவர் வாகனம், அதனுடன் வரும் பாதுகாப்பு வாகனங்கள் சாலையில் அணிவகுத்து வருவது குறித்து அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

நாளை சனிக்கிழமை மதியம் 1:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அவிநாசியிலிருந்து, கோவை நகருக்குள் சின்னியம்பாளையம் வழியாக கனரக வாகனங்கள் வர அனுமதியில்லை என போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.