வீட்டு மின் கட்டணம் ரூ.70 ஆயிரம்: அதிர்ச்சி அடைந்த தம்பதி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

கோவை கரும்பு கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா (வயது 58). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரபியா (47). இவர்கள் இருவரும் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நாங்கள் சாரமேடு பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வருகிறோம். எங்களது குடும்பத்தில் 4 பேர் மட்டுமே உள்ளோம். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மின் கட்டணம் ரீடிங் எடுப்பதற்காக அதிகாரிகள் வந்தனர். அவர்கள் மின் அளவை குறித்து சென்று விட்டனர்.

அதன் பின்னர் எங்கள் செல்போன் எண்ணுக்கு மின் கட்டணம் குறித்து குறுஞ்செய்தி வந்தது. அந்த குறுஞ்செய்தியை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அதில் மின் கட்டணம் ரூ.70 ஆயிரம் வந்துள்ளதாக இருந்தது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டோம். அதற்கு அதிகாரிகள் 40 ஆயிரம் செலுத்த வேண்டாம் 30 ஆயிரம் செலுத்தினால் போதும். அதுவும் வாரம் 6 ஆயிரம் கட்டுங்கள் என தெரிவித்துள்ளனர்.

வீட்டிற்கு எப்படி மின் கட்டணமாக இத்தனை ரூபாய் வரும் எங்களால் செலுத்த இயலாது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியத்தில் புகார் அளித்தோம். இந்த நிலையில் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் வரும். 2 மாதங்களுக்கு முன்பு 1200 ரூபாய் மின் கட்டணமாக வந்தது. தற்போது 70 ஆயிரம் வந்துள்ளது. இதுகுறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.