நீதித்துறை சந்திக்கும் சவால்களும் வழக்கறிஞர்கள் உரிமை போராட்டம்- கருத்தரங்கு

சமூக நீதி வழக்கறிஞர்கள் மய்யம் சார்பில் ‘நீதித்துறை சந்திக்கும் சவால்களும் வழக்கறிஞர்கள் உரிமை போராட்டமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றபோது செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வுப்பெற்ற நீதிபதி அரிபரந்தாமன்,

நாடு முழுவதும் தொடர்ந்து அடிப்படை உரிமைகளுக்காக போராடுபவர்கள் கைது செய்யப்படும் நிலையில் அதை தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார். அறிவிக்கப்படாத அவசர நிலை தற்போது இந்தியாவில் நிலவி வருவதாகவும்,  வட மாநிலங்களில் நகர நக்சல் என்ற பெயரில் நடக்கும் கைது நடவடிக்கை, தேசவிரோதிகள் என்ற பெயரில் தமிழகத்தில் வேறு விதமாக நடப்பதாக கூறியவர், திருமுருகன் காந்தி, வளர்மதி, முருகன் உள்ளிட்டோர் தேசவிரோத சட்டத்தில் கைது செய்யப்படுவதை சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் மத்திய அரசின் ஆட்சி நடப்பதன் நீட்சியாகவே இதை பார்ப்பதாக குற்றச்சாட்டியவர், கைது நடவடிக்கைகளின் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களும் நன்றாக செயல்படுவதை சமீபத்திய திருமுருகன் காந்தி, தூத்துக்குடி ஜாமின் மனு உத்தரவின் மூலம் தெரிவதாக கூறினார்.

5 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து, தேசிய அளவில் இயக்கமாக உருவானது போல் இங்கேயும் அதுபோல் இயக்கம் உருவாக வேண்டும் என்றும், தடா, பொடா போன்ற சட்டங்களை நிரந்தரமாக வைத்திருக்கக்கூடிய,  ஜனநாயக, மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள

UAPA சட்டத்தை ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர், பல ஆயிரம் கோடி ஏமாற்றி வெளிநாட்டில் இருப்பவர்கள் தான் தேசவிரோதிகள் என்றார்.