காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா பேட்டி

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரபேல் விமான கொள்முதல் தொடர்பான  பேச்சுவார்த்தைகளின் போது 128விமானங்களை வாங்கவும் விமானத்திற்கு விலையாக 526 கோடி ரூபாய் வழங்குவதோடு கூடுதல் விமானங்களை இந்தியாவிலேயே ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம் மூலம் தயாரிக்கும் வகையிலும் ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் தற்போதைய பாஜக அரசில், பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்திற்கு பிறகு விமானங்களை வாங்குவதில் பெரிய அளவில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அனுமதியின்றி மாற்றங்கள் செய்யப்பட்டு மோடியின் நண்பரான அனில் அம்பானிக்கு சாதகமான அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். சீனாவில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்த முடியாமல் தவிக்கும் அனில் அம்பானியை காக்க பிரதமர் மோடி ஏன் மக்களின் பணத்தை செலவழிக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர் 3 மடங்கு அதிக விலை கொடுத்து அவ்விமானங்களை வாங்குவதின் மூலம் இந்த விமானப்படைக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை எனவும் தெரிவித்தார். ராகுல் காந்தியின் கருத்தை விமர்சிக்கும் மத்திய அரசு முதலில் விமான ஒப்பந்தம் தொடர்பாக வெளிப்படையாக விலைகளை தெரிவித்துவிட்டு பின்னர் ராகுல் கூறும் கருத்துக்களை விமர்சிக்கட்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளதற்கு பொறுபேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறித்தினார். கர்னாடகாவில் மேகதாட்டூவில் அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வோம் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.