நொய்யல் ஆற்றில் பொங்கி வரும் நுரை

கோவை மாவட்டம் பட்டணம் புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் அனைவரும் ஒண்டிபுதூரில் இருந்து சாலை வழியாக நொய்யல் ஆற்றுப்பாலத்தை கடந்து பண்டனம்புதூர் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் இன்று ஒண்டிபுதூரில் இருந்து பட்டணம் செல்லும் சாலையில் நொய்யல் ஆற்றுப்பாலத்தை   மறைத்து ‘ நுரை ‘அதிகளவில் செல்வதால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் திணறுகின்றனர். நுரை அதிகளவில் காற்றில் பரவுவதால் மூச்சுத்திணறல் மற்றும் கை கால்களில் அரிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நுரை பாலத்தின் மீது செல்வதால் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர்.

இதே போல நொய்யலின் முக்கிய நீராதரமாக விளங்கும் ஈசா யோக மையம் பின்புறமுள்ள நீலி ஆற்றில் நுரை கலந்து வருவது அப்பகுதி மக்களிடம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நீலி ஆறு வனத்திற்குள் இருந்து வரும் சிறிது தூரத்திலேயே  அப்பகுதியில் கலக்கும் கழிவு நீரால் மாசடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீலி ஆற்றில் கழிவுகளை கலப்பவர் மீது   உரிய நடவடிக்கை எடுக்க  சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.