கற்றல் ஒரு முடிவில்லாத பயணம்! – கவிதாசன்

வகுப்பு பாடங்களுடன் வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொடுப்பவரே சிறந்த ஆசிரியர் என்றும், கற்றல் என்பது இலக்கல்ல அது ஒரு முடிவில்லாத பயணம் என பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியும், கவிஞருமான கவிதாசன் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது: நமது நாட்டில் மூன்று விதமான கல்வி முறை இருக்கிறது. ஒன்று தேர்வுக்கான கல்விமுறை. இரண்டாவதாக வேலைவாய்ப்புக்கான கல்வி. மூன்றாவதாக வாழ்க்கைக்கான கல்வி. இந்த மூன்று கல்வி முறையிலும் வாழ்க்கைக்கான கல்வி முறையே சிறந்தது.

வாழ்க்கைக்கான கல்வி பாடத்திட்டத்தில் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், நல்லொழுக்க பண்பும் உடைய மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களை தேசம் எப்பொழுதும் கொண்டாடும்.

மேலும் ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு செடி தன்னைத்தானே புதுப்பித்து மரமாக வளர்வதைப் போல, நதி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதைப் போல, ஆசிரியர்களும் புதியவனவற்றை கற்றுக்கொண்டு தங்களை தாங்களே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் புது வெள்ளம் வரவில்லை என்றால் கடல் கூட காய்ந்து விடும்.

நேற்றைய பட்டதாரி இன்று படிப்பதை நிறுத்திவிட்டால் நாளை படிக்காதவர் ஆகிவிடுவார். அதாவது கற்றல் என்பது ஒரு இலக்கல்ல அது ஒரு முடிவில்லாத பயணமாக இருக்கவேண்டும் எனப் பேசினார்.