தொடர்ந்து 5 மணி நேரம் மிருதங்கம் வாசித்து கோவை மாணவர் சாதனை

கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ப்ரணவ் தொடர்ந்து ஐந்து மணி நேரம் ஒரு நிமிடம் மிருதங்கம் வாசித்து சாதனை புரிந்துள்ளார்.

கோவை, செட்டி வீதி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர், சங்கீதா தம்பதியர். இவர்களின் மகன் ப்ரணவ். கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஜி.ஆர்.டி.கல்லூரியில் வணிகவியல் துறையில் பட்ட படிப்பு படித்து வருகிறார்.

பள்ளியில் பயிலும் போதே சாணக்ய அர்த்த சாஸ்திரத்தை தொடர்ந்து பதினான்கு மணி நேரம் பாடம் எடுத்து லீடர்ஷிப் சாதனை புரிந்துள்ளார். இசையில் ஆர்வமுடைய ப்ரணவ் மிருதங்கம் வாசிப்பதை எட்டு வருடங்களாக பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் மிருதங்க இசை கருவியின் வாயிலாக ஏதாவது சாதனையை செய்ய வேண்டும் என எண்ணி, அதில் வெற்றியும் கண்டுள்ளார். அதன் படி மிருதங்கத்தின் ஐந்து இசை ஜதிகளை தொடர்ந்து ஐந்து மணி நேரம் ஒரு நிமிடம் வாசித்து, நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவரது இந்த சாதனையை நோபள் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் தியாகு நாகராஜ் பரிந்துரை செய்தார்.

சாதனை குறித்து அவர் கூறுகையில், மிருதங்க இசையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த சாதனையை செய்ததாகவும், மேலும் எனது பெற்றோர், எனக்கு அளித்த பிரத்யேக பயிற்சியால், தம்மால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த சாதனையை கண்காணித்த நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தின் கலை பண்பாட்டு துறை தீர்ப்பாளர் சிவ முருகன் மாணவனுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.