இந்திய மொழி புத்தகத்துக்கு முதல்முறையாக புக்கர் விருது

இலக்கியத்திற்காக வழங்கப்படும் சர்வதேச புக்கர் பரிசை இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளார். இதன்மூலம் இந்திய மொழி எழுத்தாளர்களில் முதல் புக்கர் பரிசை வென்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ இந்தியில் எழுதியுள்ள ‘ரெட் சமாதி’ (Ret Samadhi) என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘டூம் ஆஃப் சாண்ட்’ (Tomb of Sand) நூலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ரெட் சமாதி’ நாவல், மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல்லால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கான பரிசுத்தொகை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளருக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.

இது இந்தியாவை அடிப்படையாக கொண்ட ஒரு குடும்ப கதையாக இருப்பதோடு, கணவர் இறந்த பிறகு வாழும் 80 வயதான ஒரு பெண்ணை நோக்கிய கதையாக அமைகிறது.

புக்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தி மொழி புத்தகம் என்ற பெருமையையும் இந்நூல் பெற்றுள்ளது சிறப்புக்குரியது. இவரின் புத்தகங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இந்த பரிசு கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை, இதனை வெல்வேன் என நினைக்கவில்லை,மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் பணிவாகவும் உணர்வதாக விருதை ஏற்றுக்கொண்ட கீதாஞ்சலி ஸ்ரீ பேசியதாக பிடிஐ செய்தி பிரிவு குறிப்பிடுகிறது.

மேலும், புக்கர் விருதுக்கு தேர்வாவேன் என்ற நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்த அவர், தான் ஒரு தனிமை மற்றும் அமைதியில் வாழும் எழுத்தாளர் என பிபிசியிடம் பேசியபோது தெரிவித்துள்ளார்.