படிப்புக்கேற்ற தொழிற்பயிற்சி அவசியம்

மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் அதிகரிக்காததன் விளைவாக தங்களுக்கான வேலையைத் தேடி அலையும் நிலை இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருப்பது மிகவும் கவலை தரும் செய்தி.

படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. படித்தவர்கள் அனைத்து விதமான படிப்புகளையும் சம விகிதத்தில் படித்திருந்தால் ஒரளவுக்கு வேலை வாய்ப்புப் பிரச்சினையை சரி செய்யலாம். ஆனால் படித்தவர்கள் குறிப்பிட்ட சில வேலைகளைக்  குறி வைத்தே படித்ததும், அதனை ஆதரிக்கும் வகையில் புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகள் ஒரே மாதிரியான பாடங்களை வழங்கியதும் கூட முக்கியமான காரணமாகும்.

அதிக ஊதியம் கிடைக்கும் மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வம் செலுத்தியதன் விளைவாக எலக்ட்ரீஷியன், பிளம்பர், போன்ற தொழில்களுக்கான ஆள்பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையை சரி செய்வதற்காக கல்வியாளர்கள் ஒரு சில ஆலோசனைகளை முன் வைக்கிறார்கள்.

  • கல்விக்கான கட்டுப்பாடுகளில் ஒரு சிலவற்றை தளார்த்தி, அனைவரும் அணுகும் வகையில் அமைக்க வேண்டும்.
  • தொழிற் பயிற்சிகளை கட்டாயமாக்க வேண்டும்.
  • பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு பாடத்திட்டங்களை அமைத்து வேலை வாய்ப்பிற்கு ஏற்ற வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும்.
  • தொழில்முனைவோராவதை ஊக்குவிக்கும் செயல்களை மாணவர்கள் உயர்கல்வி படிக்கும்பொழுது இருந்தே அளிக்க வேண்டும்.
  • மாணவர்கள் அனைவரும் தொழில் அனுபவம் பெறும் வகையில் படித்து முடித்தவுடன் கட்டாய தொழிற்பயிற்சியியை வழங்க வேண்டும்.

“நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்தாலும், முறையான தொழில் பயிற்சியோடு அல்லது நிறுவனங்களுக்கு தேவையான திறன்களோடு வரக்கூடிய விண்ணப்பங்களின் அளவு விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் குறைவாகத் தான் இருக்கிறது” என பெரிய நிறுவனங்களின் மனித வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே பாடத்தை வெறுமனே படிக்காமல் தொழில் பயிற்சி, தேவையான திறன்களை வளர்த்தல் போன்றவற்றில் ஆர்வத்தை செலுத்தி வேலைவாய்ப்பை எளிதாக பெற்றுக்கொள்வதற்கு தயாராவோம்.