மத்திய அமைச்சர்களுடன் கோவை தொழில் அமைப்பினர் சந்திப்பு

கோயம்புத்தூர் தொழில் அமைப்புகளின் தலைவர்களை கொண்ட ஒரு குழு மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை அமைச்சர் நாராயண் டி ரானே- வை, சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் கடுமையான விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்தக் கோரி கோவை தொழில் அமைப்பினர் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும் இந்த குழுவினர் மத்திய மீன்வளம், கால்நடை, பால் பண்ணை மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் L. முருகனை சந்தித்தனர்.

மேலும், இதுகுறித்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உள்நாட்டு விலையைவிட ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல் போன்ற மூலப்பொருளின் விலை குறைந்தது 10% ஆவது அதிகமாக இருக்க வேண்டும்.

உடனடியாக எல்லா மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கும் தடைவிதித்து உள்நாட்டில் நிலைமையை சீராக்க வேண்டும். வரிகள் ஏதும் இல்லாமல் மூலப்பொருளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளில் மூலப்பொருள் உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்கள் நல்ல லாபம் ஈட்டியுள்ள அதே நேரத்தில் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் லாபம் அவ்வளவாக இல்லை. இதில் ஒரு சமநிலை எட்டப்பட வேண்டும்.

வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கு ஐஎஸ்ஐ மார்க் தேவை என்று கட்டாயப்படுத்தக் கூடாது.

விலை ஏற்றம் காரணமாக சிறுதொழில் நிறுவனங்கள், இரண்டாம் தர மூலப்பொருளை பயன்படுத்துவதால் பொருட்களின் தரம் குறையும். ஸ்டீல், வணிக ஊகங்களில் சிக்காமல் பயனளிக்கும் வகையில் செய்யப்பட வேண்டும்.

மூலப்பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியில் 50% பொருட்களை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிலகங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இந்த சிக்கலை தீர்க்கும் வகையில் தேசிய சிறுதொழில் கழகம் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு வழங்கிய ஆர்டரை தொடர வேண்டும். ஒரு விலை கண்காணிப்பு குழு அமைத்து, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும்.

கோவையில் மூடப்பட்டிருக்கும் செயில் மூலப்பொருள் வளாகத்தை உடனடியாக திறக்க
வேண்டும். முன்பு போலவே SAIL, VIZAG, NSIC, SIDCO போன்ற அமைப்புகள் மீண்டும் மூலப்பொருள் வழங்கும் முகமைகளாக அமைய வேண்டும்.

அனைத்து மூலப்பொருட்களின் விலையையும், கட்டுப்படுத்தவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை அமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்துள்ளோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.