தமிழ்மொழி புதிய எல்லைகளை தொடவேண்டும்!

– பாராட்டு விழாவில் சிற்பி பாலசுப்பிரமணியம் பேச்சு

தமிழ்மொழி புதிய எல்லைகளை தொட முயற்சி செய்தால், அது தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் சிறந்த எதிர்காலம் ஆக இருக்கும் என சிற்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நன்னெறிக் கழகம் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் இணைந்து பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியனுக்கு பாராட்டு விழா நடத்தியது.

தமிழ் இலக்கியவாதி, கவிஞர், தமிழகத்தின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரான சிற்பி,
மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்காகவும் இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.

மேலும் கல்வி மற்றும் இலக்கிய பிரிவில் இவருக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த இவர் 140-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் சிற்பி பாலசுப்பிரமணியனுக்கு பாராட்டு விழா ஞாயிறு அன்று நடைபெற்றது.

நன்னெறிக் கழகத்தின் தலைவர் இயாகோகா சுப்பிரமணியம் தனது வரவேற்புரையில், சிற்பி அவர்களின் இலக்கிய பயணம் கொங்கு மண்ணிற்கே பெருமை என்றும், நல்ல எழுத்துக்களை எழுதுபவர்களை அழைத்து அவர்களை ஊக்குவிக்கும் பணியை தொடர்ந்து செய்வதை பாராட்டிக் கூறினார்.

தொடர்ந்து சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

இந்த விழாவுக்கு சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கி பேசுகையில்: பல இடங்களில் தமிழ் மொழி அழிந்து வருகிறது எனக் கூறினாலும், அது உண்மையாகாது. ஏன் என்றால் மனிதர்கள் வேண்டுமானால் அழியலாம் ஆனால் தமிழ் மொழி என்றும் அழியாது. உன்னத நிலையை அடைந்தவர்கள் பலர் தமிழர்களாக இருக்கின்றனர் என்றார்.

மாணவர்களுக்கு விரும்பத்தக்க வகையில் சில மாற்றங்களை தமிழில் கொண்டு வந்தால் அவர்களும் தமிழை விரும்புவார்கள். பிறமொழி பாடங்களை போலவே தமிழிலும் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.

தமிழின் பல பாணிகள் காணாமல் போய்விட்டது. ஆனால் இலங்கை தமிழ் மட்டும் அதன் இயல்பை இழக்காமல் உள்ளது.

பல்வேறு மொழியின் கருத்துக்களை தமிழ் மொழியில் கொண்டு வருவதற்கான முயற்சியை செய்ய வேண்டும். அதனை அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் செய்து வருகிறது. இதன் தலைவராக உள்ள சிற்பி பாலசுப்பிரமணியம் அரிய பல நூல்களை தமிழில் மொழி பெயர்த்து வருகிறார்.

பல மொழிகளில் உள்ள கருத்துக்களை ஜப்பானியர்கள் தங்களது தாய்மொழியிலேயே கற்கின்றனர். அதனால் தான் அவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர். அது போல பிற மொழியின் கருத்தை தமிழில் கற்கவேண்டும் எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேராசிரியர் கிருங்கை சேதுபதி, கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநரான ரவி சுப்பிரமணியம் சிற்பியை வாழ்த்தி தங்களது வாழ்த்துரையை வழங்கினார்கள்.

தினமணி நாளிதழின் ஆசிரியர் கி. வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், பொதுவாகவே தங்களது சொந்த ஊரில் கவிஞர்களுக்கு பாராட்டும், மரியாதையும் கிடைப்பதில்லை. ஆனால் சொந்த ஊரில் இருந்தே பேரையும், புகழையும் பெற்றுள்ளார் சிற்பி.

தான் பிறந்த மண்ணில் கவிஞர்களுக்கு பாராட்டு கிடைக்க வேண்டும். மகாகவி பாரதியார் கூட தான் இருந்த காலத்தில் இதற்காக ஏங்கினார் என்று குறிப்பிட்டு பேசினார்.

சிற்பிக்கு அவருக்கான பாராட்டும், மரியாதையும் சொந்த மண்ணிலேயே கிடைத்துள்ளது.

கவிஞர்களின் எழுத்து என்றுமே அழியாதது. அதனால் தான் அவர்களை போற்றுகிறோம். ஆட்சியாளர்களை, அதிகாரிகளை வரும் காலங்கள் மறக்க கூடும். ஆனால் கவிஞர்களை வரலாறு என்றும் பேசி கொண்டே இருக்கும்.

கவிஞனை வைத்தே ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அடையாளம் காணப்படுகிறார்கள். அதை நாம் மறந்து விடுகிறோம். ஒவ்வொரு கவிஞனும் வரலாற்றின் அடையாளத்தை கூறுகிறார்கள்.

எழுத்தாளரையும், கவிஞரையும் போற்றாத சமுதாயம் நாகரிகமான சமுதாயமாக இருக்க முடியாது என்றார்.

மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தாய் மொழியில் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மொழி பெயர்ப்புக்காக தமிழ் மொழியிலேயே பல நல்ல வார்த்தைகள் உள்ளன. அதை விடுத்து ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆங்கில மொழியில் உள்ள வார்த்தையை தமிழில் அப்படியே கொண்டு வந்தால்
தமிழ் மொழி என்னாகும் என்ற அச்சம் வருகிறது என்ற தன் கருத்தையும் கூறினார்.

மொழி என்பது கருத்து பரிமாற்றதுக்கான கருவியே. எளிதான வார்த்தையை உருவாக்க வேண்டும். இல்லை எனில் கிடைக்கும் வார்த்தையை மட்டுமே பயன்படுத்தும் சூழல் ஏற்படும் என்றார்.

இதனைத் தொடர்ந்து, சிற்பி பாலசுப்பிரமணியம் கூறியதாவது: ஆங்கிலம் என்ற சொல்லை அப்படியே வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதை தமிழ்வழி படுத்தலாமா என்ற விவாதம் இங்கு வெகு காலமாக நடந்து வருகிறது.

வடமொழி முதன்முதலாக தமிழுடன் இணைய தொடங்கிய காலத்தில் இருந்து இந்த விவாதம் நடைபெறுகிறது. வட சொல்லை தமிழ் இசைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் என்பதையும் அவர் பதிவிட்டார்.

இதுகுறித்த மோதல் இங்கு நெடுங்காலமாக நிலவி வருகிறது. இதுபோன்ற விவாதங்களோடு தமிழ்மொழி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

தமிழ்மொழி புதிய எல்லைகளை தொட முயற்சி செய்தால் அது தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் சிறந்த எதிர்காலம் ஆக இருக்கும்.

குழந்தைகளை தமிழ் வழியில் கல்வி கற்க வைக்க பெற்றோர்களும் சமுதாயமும் முன்வந்து, மனம் மாறவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி இருக்க வேண்டும். மாநில அரசாங்கத்திற்கு இருக்கக்கூடிய உரிமையைப் பயன்படுத்தி தனியார் பள்ளியாக இருந்தாலும் 1 முதல் 8 வரை தமிழ் வழிக் கல்வி தான் இருக்க வேண்டும் என்ற நிலை வரவேண்டும்.

அப்போது சட்டத்திற்கு முன் அனைவரும் தலை வணங்க வேண்டி வரும். அப்படி ஒரு நிர்பந்தம் இருந்தாலே மாறுதல் ஏற்படும் என்று கூறினார்.

 

PHOTOS: Sathis Babu