தமிழகத்தில் 88% பேருக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 92.38 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 77.28 சதவீதம் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் 88 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஹீமோபீலியா தின விழா மற்றும் தமிழகத்தில் உள்ள 32 அரசு மருத்துவமனைகளில் ரூபாய்.87.97 கோடி செலவில் பல்வேறு கட்டிட பணிகளை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், ஹீமோபிலீயாவை நோய் என கருத வேண்டாம். முன்னோர்களிடம் இருந்து வந்த அசவுகரியம் என நினைத்தால் போதுமானது. ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவருக்கு பாதிப்பு என்றாலும் சிகிச்சை அளிக்க அரசு முழு முயற்சி எடுக்கும். அரசு உங்களுடன் இருக்கும் என தெரிவித்தார்.

வீடுகளுக்கே எடுத்து சென்று ஹீமோபிலியா மருந்துகளை வழங்க வேண்டும் என நிகழ்வில் ஒருவர் கோரிக்கை விடுத்த நிலையில், 29ம் தேதி நடைபெறும் மானியக்கோரிக்கையின் போது ஹிமோபிலியாவிற்கான மருந்துகள் அனைத்து மாவட்ட மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

அடுத்த மாத துவக்கத்திலிருந்து தமிழகத்தில் 42 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஹீமோபிலியா மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அவர், இந்தியாவிலேயே அதிக மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழ்நாடு எனவும் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இருந்தாலும், பல்வேறு நோய்களுக்கான சிறப்பு சிகிச்சைகள் கோவையில் கிடைக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் 61,18,911 பேருக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனவும் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் இதுவரை 49, 949 பேருக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடி ரூபாய் இதுவரை அரசு வழங்கியுள்ளது என கூறினார்.

இத்திட்டத்தால் 30 முதல் 40 சதவீதம் வரை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 100 சதவீதம் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. மத்திய அரசுதான் 812 இடங்களை நிரப்ப வேண்டும். ஆனால் விண்ணப்பிப்பதற்கான காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் 24 இடங்களை மத்திய அரசு நிரப்பவில்லை.

தமிழகத்தில் கொரோனா முழுமையாக முடிவுக்கு வந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியாவில் தற்போது 7 வகை வைரஸ்கள் நிலுவையில் உள்ளது. அரசு எடுத்த நடவடிக்கையால் கடந்த 21 நாட்களாக உயிரிழப்பு இல்லை.

தமிழகத்தில் 92.38 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 77.28 சதவீதம் 2வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் 88 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை மரபணு மாற்றம் செய்யும் ஆய்வுக்கூடத்தை நாட்டிலேயே தமிழக அரசு தான் சொந்தமாக வைத்துள்ளது.

பிற நாடுகள் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கப்பட வேண்டும். முகக்கவசம் போட விலக்கு அளிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொண்டு மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் பெட்டகம் வழங்குவதில் கடந்த ஆட்சியில் குளறுபடி ஏற்பட்டது. குழு அமைத்து அதை ஆய்வு செய்து வருவதாகவும், விடுபட்டவர்களுக்கு மாவட்டம் வாரியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த அவர், தமிழகத்தில் 355 ஒன்றியங்களில் இல்லம் தேடி மருத்துவம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கோவையில் 159 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் போட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும், முன்கள பணியாளர்கள் நீங்கலாக பிறருக்கும் தடுப்பூசி பூஸ்டர்களை இலவசமாக செலுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.