இந்தி திணிப்பை மேற்கொண்டால் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் – இயக்குனர் வெற்றிமாறன்

அவரவருக்கு எந்த மொழி தேவையோ, அதை மட்டும் பேசுவதற்கு உரிமை உள்ளது என்றும், இந்தி திணிப்பிற்க்கான முயற்சியை எப்போது மேற்கொண்டாலும் அதற்கான எதிர்ப்பை சந்திக்க நேரிடும் எனவும் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மேலும், அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது எனவும், வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவின் இந்தி மொழி குறித்த இந்தக் கருத்துக்கு தமிழ்நாட்டில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ட்விட்டரில் அரசியல் தலைவர்களும் பொது மக்களும் தங்கள் விமர்சனங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தி மொழி சர்ச்சை குறித்து சன் செய்தியில் இடம்பெற்ற கேள்விக்களம் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது கருத்தை திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் முன்வைத்தார். அதன் சுருக்கமான தொகுப்பு:

ஒருவர் தன் தாய்மொழி வாயிலாக தான் இந்த உலகத்தை உணர முடியும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே இருந்தது. அனைவரையும் இணைப்பதற்கு ஒரு இணைப்பு மொழி போதும் எனக் கூறிய அவர், புதிதாக ஒரு இணைப்பு மொழி தேவையில்லை என்றார்.

இந்தியை மட்டும் பேசுங்கள் எனக் கூறுவது, அவர்களின் அடக்கு முறையைக் காட்டுகிறது. எந்த நிலையிலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தி பேசக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும், ஏன் வெளியில் இருந்து வந்த மொழியான ஆங்கிலத்தை நேசிக்கிறீர்கள் என்ற கூற்றை இந்தி இணைப்பு மொழியை ஆதரிக்க கூடியவர்கள் கூறுகிறார்களே என்ற நெறியாளரின் கேள்விக்கு, இந்தி பேசாத மாநிலங்களை பொறுத்தவரை இந்தியும் வெளியில் இருந்து வந்த ஒரு மொழி தான் என பதில் அளித்தார்.

இந்தியை ஏற்றுக் கொண்டு அவரவர்களின் தாய்மொழியை விட்ட பல மாநிலங்கள் உள்ளது. அதன் வளர்ச்சி நிலை, கல்வி நிலை எப்படி இருக்கிறது என்றும், இந்தியை எதிர்க்கக் கூடிய தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் வளர்ச்சியும், கல்வி நிலையும் எப்படி இருக்கிறது என்பதையும் ஒப்பிட வேண்டும் என்ற கருத்தை அவர் முன் வைத்தார்.

ஆனால், இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் இந்தியை பேசுவதிலும், அதனை போற்றுவதிலும் எந்த தவறுமில்லை என்பதையும் தெரிவித்தார். அதுவே இந்தி தாய் மொழியாக இல்லாமல், அதை ஏற்றுக் கொண்டுள்ள உள்ளூர் மொழியை இழந்த மாநிலங்களின் நிலை என்ன? என்ற கேள்வியை முன் வைத்தார்.

இந்தி பேசும் மாநிலங்களுக்கு சென்றால் தேவைப்பட்டால் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் அதனை கற்று கொள்ளலாம். நம் தேவைக்காக நாம் இந்தியை கற்றுக்கொள்ள உரிமை உள்ளது. என் நாட்டில் வாழும்போது எனக்கு எந்த மொழி தேவையோ, அதை மட்டும் பேசுவதற்கும் உரிமை உள்ளது. இந்தி திணிப்பிற்க்கான முயற்சியை எப்போது மேற்கொண்டாலும் அதற்கான எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்றார்.

இந்தி ஒன்றை மட்டுமே அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியையும், ஆங்கிலத்தை நீக்க என்ன அவசியம் உள்ளது என்ற கேள்விக்கு, உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் எளிதாக உள்ளது. அதை நீக்கி விட்டால் ஒருவேளை நாமும் இந்தியை ஏற்றுக் கொள்வோம் என்ற எண்ணம் அவர்களிடம் நிலவலம் என பதில் அளித்தார்.

ஒரு மொழிக்கு மட்டும் தரும் முக்கியத்துவத்தையும், அதற்கு பின்னால் உள்ள அரசியலாக எதை பார்க்கிறீர்கள்?

ஒரு நிலம், ஒரு மொழி என இருந்தால் அவர்களின் எல்லா வித செயல்பாடுகளுக்கும் அது எளிமையாக இருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.

 

செய்தி தொகுப்பு: சு.ரம்யா