வண்ணமும் கலையும் கலந்த கோயம்புத்தூர் விழா

கோயம்புத்தூர் விழாவின் இரண்டாம் நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவின் ஒரு பகுதியாக, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் கிரீன் சிட்டி சார்பில், ‘சைக்கிள் டு ரீ சைக்கிள்’ பசுமை பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பிற்கான பெடல் என்ற சைக்கிள் ஓட்டுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது.

இந்த சைக்கிள் பேரணியில் சுமார் 135 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் செந்தில் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். ரேஸ் கோர்ஸில் இருந்து தொடங்கி, ஒண்டிப்புதூரில் விழிப்புணர்வு பேரணி முடிவுற்றது.

கோவை நேச்சர் சொசைட்டி, தி நேச்சர் அண்ட் பட்டர்பிளை சொசைட்டி மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து வெள்ளலூர் சதுப்பு நிலத்தில் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல குழந்தைகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 50 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்ததாக உக்கடம் கலை மாவட்டத்தில் (art district), காலை நடைப்பயிற்சி நடைபெற்றது. பின்னர் ஒன்பது சுவர் ஓவியங்களும் ஒவ்வொன்றின் பின்னுள்ள கதைகளும் விளக்கப்பட்டன.

தொடர்ந்து, டீம் எவோக், கோவை விமான நிலையத்தில் ஃபிளாஷ்மாப் நிகழ்ச்சி நடைபெற்றது. கிளாசிக்கல், மேற்கத்திய, நாட்டுப்புற மற்றும் ஃப்யூஷன் நிகழ்ச்சிகளைக் கொண்டிருந்தது.

மேலும், கேஜி மருத்துவமனை தனது கண் மருத்துவ பிரிவில் பொதுமக்களுக்கு ஏப்ரல் 17ம் தேதி வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை இலவச கண் சிகிச்சை முகாமினை ஏற்பாடு செய்துள்ளது. இலவச கண் சிகிச்சை முகாம் நிகழ்ச்சி ஞாயிறு அன்று துவங்கியது. தலைமை கண் மருத்துவர் டாக்டர் மனோஜ் ராமச்சந்திரன் மற்றும் ஆலோசகர் டாக்டர் பிபுல் குமார் தாஸ் ஆகியோர் 15 பேருக்கு இலவசமாக பரிசோதனை செய்தனர்.

இந்த விழாவின் ஒரு பகுதியாக, ஹைட்ரோபோனிக்ஸ் விவசாய நுட்பங்கள் மற்றும் பதுங்கு குழி மாதிரிகளை மையமாகக் கொண்ட விவசாய தொழில்முனைவு குறித்த இலவச பயிற்சி இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு 7 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பயோ ப்ளூம்ஸ் அக்ரோ இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குனர் கனகராஜ் தங்கவேல் பயிற்சியை நடத்தினார்.