புகையிலையால் அழியும் விவசாய நிலங்கள்!

டாக்டர்.ஆர்.வி. கல்லூரியில் புகையிலை விழிப்புணர்வு

டாக்டர். ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையிலை விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கணிதவியல் துறைத் தலைவரும், நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான உமாபிரியா வரவேற்புரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார். கோவை மாவட்ட புகையிலைக் கட்டுப்பாட்டு மையத்தின் மாவட்ட ஆலோசகர் சரண்யா தேவி மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் சமூக சேவகர் முரளி கிருஷ்ணா சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, “நமது உலகம் நமது சுகாதாரம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: புகையிலை, பீடி, சிகரெட் போன்றவற்றில் 4000 வகையான நச்சுப்பொருட்கள் உள்ளன. இவற்றில் 200 க்கும் மேற்பட்டவைகள் புற்றுநோயை உண்டாக்கும். ஆண்களைப் போலவே பெண்களும் புகை பிடிக்கிறார்கள். உடல் ஆரோக்கியம் இல்லையென்றால் மனதும் ஆரோக்கியமாக இருக்காது. அடுத்த தலைமுறையினர் நம் பழக்க வழக்கங்களை பார்த்துத்தான் பின் தொடர்வார்கள்.

இன்றைய இளைய தலைமுறையினர் தம் உடல் மீதும், சுற்றுப்புறச் சூழ்நிலை மீதும் அக்கறை கொள்ள வேண்டும். புகைப்பிடிப்பதால் அதில் இருந்து வரும் கார்பன் மோனாக்சைடு 30 வருஷத்தில் ஒரு டிகிரி வெப்பத்தை அதிகப்படுத்துகிறது. அதனால் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

புகையிலையை ஒரு நிலத்தில் ஒரு முறை பயிரிட்டால் அதில் மறுமுறை வேறு எந்த விலை பொருளும் விளைய வைக்க முடியாது. அதனால் பல விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. புகையிலையை உபயோகிப்பதால் வாய், தொண்டை, நுரையீரல், மூச்சுக்குழாய், சிறுநீரகம் போன்றவை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றன.

கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. புகைப்பவர்கள் மட்டுமல்லாமல் அவர்களைச் சுற்றி உள்ள மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர்” என்று பல்வேறு கருத்துக்களை மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைத்தனர்.