பிரதமர், ஜனாதிபதியை தவிர இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சா மற்றும் அவரது சகோதரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தவிர அக்கட்சியின் பிற அமைச்சர்கள் அனைவரும் தங்களின் ராஜினாமாவை அறிவித்து வருகின்றனர்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ராஜினாமா குறித்து ஞாயிற்றுக்கிழமை செய்திகள் வெளிவந்த நிலையில், இலங்கை பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் சுற்றுலாத் துறை முடக்கம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியான பாதிப்புகளால் ராஜபக்ச சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேறக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு இலங்கையில் அவசர நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரகடனப்படுத்தியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக அவசர நிலையை அறிவிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்தார்.

இவற்றை தொடர்ந்து தற்போது இலங்கையின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்சவும் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.

இலங்கையில் பிற அமைச்சர்களும் தங்களின் ராஜினாமாவை அறிவித்து வருகின்றனர். இதை அந்நாட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன செய்தியாளர்கள் மத்தியில் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதிபர் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி போராட்டம் வெடித்துள்ள நிலையில் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்திருப்பதால் புதிய அமைச்சரவை விரைவில் அமைக்கப்படும் என இலங்கை வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன.