திறமைகள் பலவிதம்…

“என்னைப் போன்றவர்கள் எட்டு, ஒன்பது, பத்து, வயதிலேயே அவர்களின் திறமைகள் என்ன என்பதை அறிந்துகொள்வார்கள். ஏன் யாரும் என்னைக் கண்டுபிடிக்கவில்லை? இந்தப் பள்ளியில் உள்ள அனைவரையும் விட நான் புத்திசாலி என்று அவர்கள் பார்க்கவில்லையா?  என்று நான் எப்போதும் ஆச்சரியப்பட்டது உண்டு.”

இவ்வாறு மனவருத்தப்பட்ட நபர் தான் மேற்கத்திய இசை உலகின் நிகரில்லா நட்சத்திரங்களில் ஒருவரான ஜான் லெனன்.

இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரத்தில் 1940ல் பிறந்தவர் இவர். பிறந்தது முதல் தன்னுடைய வாலிப வயது வரை இவரின் பெற்றோர் தொடர்ந்து பிரிந்தும், பேசாமலும் இருந்ததால் அவர்கள் கவனிப்பு கிடைக்காமல் சற்று தனியாகவே வளர்ந்தார். அவர் தாயாரோ பின்னாட்களில் வேறு ஒருவரை மணமுடித்துக் கொண்டார்.

பள்ளிக்கூடத்தில் மிகவும் குறும்புக்காரர். பலநாட்கள் தன்னுடைய அத்தை வீட்டில் வளர்ந்தார். 10 ஆம் வகுப்புவரை கடந்த இவர், உயர்நிலைப் பள்ளிப்படிப்பில் பெரிதும் நாட்டம் இல்லாமல்  பின்தங்கி காணப்பட்டார். பிற மாணவர்களை விட சற்று அதிக உற்சாகமும் விளையாட்டுத்தனமும் கொண்டவராகவே இருந்து வந்தார்.

அதே தருணம், மாணவர்களோடு, புது நபர்களோடு  எளிதில் பழகக்கூடிய திறனும், நகைச்சுவை உணர்வும், அவர்களை மகிழ்விக்கும் திறனும், இவை அனைத்துடன் நன்றாக கவிதை வரிகள் எழுதும் திறமை சிறுவயது முதலே இவருக்கு இருந்தது.

இன்று பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் விரும்புவது அவர்கள் நன்றாக படித்து, பின் இன்னமும் கொஞ்சம் கூட படித்து, பெரிய உத்யோகத்தில் சேர்ந்து தங்கள் எதிர்காலத்தை நன்றாக அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதே. அதே போலத்தான் ஜான் மீதும், அவர் அத்தை மற்றும் தாயார் எதிர்பார்த்தனர். ஆனால் ஜான் ஏதாவது வம்பிழுத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரின் திறமைகளை யாரும் பெரிதளவில் ஊக்குவித்து தட்டிக் கொடுக்கவில்லை.

இளம் வயதில் தன் அத்தையிடம் “நீங்கள் என் கவிதைகளை இன்று வெளியே எறிகிறீர்கள், நான் பிரபலமாகும் போது நீங்கள் வருத்தப்படுவீர்கள்” என்று கூறுவது வழக்கம். இவ்வாறு செய்ததால், தான் அவர்களை ஒருபோதும் மன்னிக்க போவதில்லை என உறுதியாக இருந்தார்.

தன்னுடைய தாய் இறந்தபின் மிகவும் கோவக்காரராக மாறினார் ஜான் லெனன். ஆனால் அவரின் பள்ளி ஆசிரியர் ஒருவர் அவரின் திறமைகளை கண்டு அவரை மேல்படிப்பிற்கான கல்லூரியில் சேர்வதை விட கலை திறமைகளை மெருகேற்றும் லிவர்பூல் கலை கல்லூரியில் சேர சிபாரிசு செய்தார்.

கல்லூரியிலும் முழுமையாக படிப்பை முடிக்காமல் பள்ளியிலிருந்தது போலவே சண்டை, வம்பு என்று இருந்த ஜான், ஒரு நாள்  கல்லூரியில் தோழர் ஒருவருடன்  இசை குழு ஒன்றை உருவாக்கினார். அங்கிருந்து அவர் கலைப்பயணம் லண்டன் நகரத்தில் துவங்கியது. ஆரம்பத்தில் குவாரிமென் என்று அழைக்கப்பட்ட அந்த குழு பின்னாட்களில் ‘தி  பீட்டில்ஸ் என்று அறியப்பட்டது.

ஜான் எழுதிய பாடல்கள், பாடிய பாடல்கள் மேற்கத்திய நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மொத்தம் 600 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்கப்பட்டு வரலாற்றில் இன்றும் யாராலும் நெருங்கமுடியாத இடத்தில் இந்த குழுவின் சாதனை இருக்கிறது.

மேற்கு உலகமே அவர் பாடல்களுக்கு கைவிரல்களில் மெட்டுப்போட, அவர் பணம், புகழ், மக்களின் அபிமானம் அனைத்தையும் பெற்றார். இருந்தும் தன்னுடைய திறனை ஏன் யாரும் கண்டுபிடிக்கவில்லை என்பது அவர் மனதில் சிறுவயதிலிருந்தே வலியாக இருந்தது.

துவக்கத்திலேயே தன்னை ஏன் கலைப் பள்ளியில் சேர்க்கவில்லை? மற்றவர்களைப் போல ஏன் தன்னையும் டாக்டர் ஆகவேண்டும் ஆசிரியர் ஆகவேண்டும் என்று  வற்புறுத்தினர்? என்றெல்லாம் வருத்தப்பட்டதை ஒரு நேர்காணலில் பல ஆண்டுகளுக்கு முன் பதிவிட்டிருந்தார்.

நம் சமூகத்தில் சில குழந்தைகளிடம் கற்றல் திறன் குறைவாக தான் இருக்கும். அவர்கள் அவ்வாறே கற்க சிரமப்பட்டு, பின் கல்வியில் பின்தங்கி, பிற்காலத்தில் சுமாரான பணியிலே செல்வதை பலமுறை நாமே கண்டிருப்போம். திறமை எழுத்தறிவாக மட்டுமே தான் இருக்க வேண்டுமா? நம் குழந்தைகளின் திறனை அடையாளம் காண்பது நம் கடமை அல்லவா?

Article by: David Karunakaran.S