மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்: கோவையில் 90 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் 90 சதவீதம் பேருந்துகள் இயங்கவில்லை என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றும் நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதனால் வங்கி, போக்குவரத்து சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் தடைபட்டுள்ளன. கோவையை பொறுத்தவரை வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 90 சதவீத அரசு பேருந்துகள் இயங்கவில்லை. பேருந்துகள் அனைத்தும் அந்தந்த டிப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் காலை நேரத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்லும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இயங்கும் ஒரு சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.