முதியவர் மூளையில் ரத்தக் கசிவு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய என்.எம்.மருத்துவமனை

மூளையில் கடுமையான ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிர் பிரியும் தருவாயில் இருந்த 65 வயது முதியவரை துரித கதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அன்னூர் என்.எம்.(NM) மருத்துவமனை மருத்துவர் சாதனை புரிந்துள்ளார்.

கோவை அன்னூர் அடுத்த சாணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவரான குப்புசாமி என்பவர் கடுமையான தலைவலி காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அன்னூர் பகுதியில் உள்ள என்.எம்.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவமனை நரம்பியல் மருத்துவரான ஷேக் முஹம்மத் அமீர்கான் அவருக்கு மூளையில் ரத்த கசிவு இருப்பதை கண்டறிந்துள்ளார். மேலும் முதியவர் சுயநினைவு இழந்து வருவதை உணர்ந்த மருத்துவர் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை அளித்த போது வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான ரத்தக்கசிவு இருந்ததை அடுத்து உடனடியாக மருத்துவர் குழுவினருடன் இணைந்து துல்லியமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு இரத்த கசிவை நிறுத்தியுள்ளார்.

தொடர்ந்து மூன்று நாட்கள் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள் தற்போது அவரை பூரனமாக குணப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய மருத்துவர், உயர் ரத்த அழுத்தம் காரணமாகவே அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் துரிதகதியில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் தற்போது அவர் முழுமையாக பூரண குணமடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஒரு மணி நேரம் தாமதித்து இருந்தாலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் இது போன்ற சிகிச்சைகள் மிகக் குறைந்த கட்டணத்தில் தங்களது மருத்துவனையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மருத்துவமனை தலைவர் நடராஜன், மருத்துவமனை தலைமை மருத்துவர் மஞ்சுளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.