கோவையில் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் – மனுநீதி அறக்கட்டளை கோரிக்கை

கோவையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக நெறிமுறைகளை மீறியுள்ளதாகவும், வாக்குரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் என மனுநீதி அறக்கட்டளை சார்பில் மாவட்ட தேர்தல் சிறப்பு அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பது: “கோவை மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் நடைபெற்ற வெளிப்படையான ஜனநாயக விரோதப்போக்கான பணம், பரிசுப் பொருள் வினியோகம் பற்றி விசாரித்து முடிக்கும்வரை வாக்கு எண்ணிக்கை முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் ஜனநாயக விரோதப் போக்கு விதிமுறை மீறல் கடினமாக தண்டிக்கப்பட வேண்டும்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு வாக்கு சாவடியில் உரிமை மறுக்கப்பட்ட வாக்காளர்களுக்கு மீண்டும் வாக்குரிமை அளிக்கும் உத்தரவாதத்தை வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் 2022 தேர்தல் புகார்கள் அனைத்தையும் விசாரித்து முடித்து அதன்பின் எண்ணிக்கையை நடத்த வேண்டும்.

தமிழக தேர்தல் ஆணையம், கோவை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, ஊடகத்துறையினர் உள்ளிட்ட அத்தனை பேரையும் கேலிக்கூத்தாக்கிய அரசியல் கட்சியினர் மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு நடவடிக்கை எடுத்து அதன் வேட்பாளர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அந்த கட்சியினருக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனையாக தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்க செய்ய வேண்டும்.

அனைவருக்கும் வாக்குரிமை, நூறு சதவீத வாக்குப்பதிவு, குளறுபடி இல்லாத வாக்குச்சாவடி உள்ளிட்ட அனைத்தையும் உறுதிப்படுத்திய பின் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.