நவி மியூச்சுவல் ஃபண்ட்: புதிய நிதித் திட்டத்தில் பிப்ரவரி 18 வரை முதலீடு செய்யலாம்

பெங்களூரைச் சேர்ந்த நவி மியூச்சுவல் ஃபண்ட் (Navi Mutual Fund) நிறுவனம் நவி யு.எஸ்.டோட்டல் ஸ்டாக் மார்க்கெட் ஃபண்ட் (Navi US Total Stock Market Fund) என்னும் புதிய நிதித் திட்டத்தை அண்மையில் கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த புதிய திட்டத்தில் பிப்ரவரி 18-ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.

இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது, வர்த்தக நிதி பரிவர்த்தனை மையமான வான்கார்ட் டோட்டல் ஸ்டாக் மார்க்கெட் இ.டி.எஃப்.-ல் (Vanguard Total Stock Market ETF) முதலீடு செய்யப்பட உள்ளது.

இந்த நிதிக்கான செலவு விகிதம் தற்போதைய சூழ்நிலையில் ஆண்டுக்கு 0.06 சதவீதமாக மட்டுமே இருக்கும். இந்தத் திட்டத்தில் பிப்ரவரி 18-ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம் என்று நவி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்நிறுவனம் திரட்டப்பட உள்ள நிதியை பெரிய, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்தாலும், ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஆல்பாபெட், அமேசான், பேஸ்புக் மற்றும் டெஸ்லா போன்ற மிகப் பெரிய நிறுவனங்களுக்கும் கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நவி குழுமத்தின் இணை நிறுவனர் சச்சின் பன்சால் கூறுகையில், “அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய சுலபமான மற்றும் மிகக் குறைந்த செலவிலான முதலீட்டுத் திட்டத்தை இந்திய ரீடெயில் முதலீட்டாளர்களுக்கு முதல்முறையாக, நவி இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கி உள்ளது. எங்களது நோக்கமே குறைந்த செலவில் புதிய முதலீட்டு வாய்ப்புகளைத் தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “வெளிப்படைத் தன்மையுடன் நிர்வகிக்கப்படும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் எங்கள் நிறுவனத்தால் இந்த ஆண்டு துவக்கப்பட்டுள்ள மூன்றாவது நிதித் திட்டம் இதுவாகும். இந்த ஜனவரி மாதத் துவக்கத்தில் நவி நிஃப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் ஃபண்ட் (Navi Nifty Next 50 Index Fund) மற்றும் நவி நிஃப்டி பேங்க் இன்டெக்ஸ் ஃபண்ட் (Navi Nifty Bank Index Fund) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினோம். மேலும் இந்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் மேலும் 3 புதிய நிதித் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளோம்” என்று தெரிவித்தார்.

Source: Press Release