கடந்த 7 ஆண்டுகளே பூமியின் வரலாற்றில் வெப்பமான ஆண்டுகள் – ஐ.நா. தகவல்

இப்பூமியின் வரலாற்றில் மிக வெப்பமான ஆண்டுகளாக கடந்த 7 ஆண்டுகள் அறியப்படுவதாக, (2015 ஆம் ஆண்டு தொடங்கி 2021) சர்வதேச வானிலை ஆய்வு மையம் (World Meteorological Organization) தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு தனது ஆய்வறிக்கையை ‘State of Global Climate Report 2021’ எனும் பெயரில் வெளியிட்டுள்ளது. அதில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

2021ல் சராசரி உலக வெப்பம் 1.11 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் (ஜனவரி-செப்டம்பர்) புவியின் சராசரி வெப்பநிலை 1850-1900 காலத்தில் நிலவிய சராசரி வெப்பநிலையை விட 1.09° செல்சியஸ் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஐ.நா.வின் வானிலை ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.

புவி வெப்பமயமாதலைக் குறைப்பது என, 2015 பாரிஸ் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சம்மதித்தன.ஆனால், 1980ல் இருந்தே தொடர்ந்து ஒவ்வொரு பத்தாண்டுகளும் முந்தைய தசம ஆண்டுகளைவிட வெப்பமானதவே இருப்பதாக சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

உலக வானிலை அமைப்புத் தரவுகளின்படி 2021ஆம் ஆண்டு உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆறாவது அல்லது ஏழாவது ஆண்டாகும்.

இது குறித்து சர்வதேச வானிலை ஆய்வு மையத்தின் பொதுச் செயலாளர் டலாஸ் கூறியதாவது, 2021 ஆம் ஆண்டில் கனடாவில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது சஹாரா பாலைவனத்தின் அல்ஜீரியாவில் பதிவாகும் வெப்பத்துக்கு சமமானதாக உள்ளது. ஆசியாவிலும், ஐரோப்பாவின் பல நாடுகளிலும் வெள்ளம் மற்றும் ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் வறட்சி ஏற்பட்டது. இது போன்ற காலநிலை மாற்றத்தால் 2021ல் பல்வேறு பகுதிகளிலும் எதிர்பாராத இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு, பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

கடந்த வாரம் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியாவின் வெப்பநிலை தொடர்பாக ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்தியாவிலும், 2021 ஆம் ஆண்டு அதிக வெப்பமான ஆண்டாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.