“திரைப்பட விமர்சனங்களை காண முடிகிறது; ஆனால் புத்தகம் பற்றிய விமர்சனங்களை காண முடிவதில்லை”

ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் நூலகம், விளையாட்டு மைதானம் இருப்பதை அனைத்து மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அவர், புத்தகம் வாசிப்பது நல்ல பழக்கம் என்றும், மேலும் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும்போது பாடங்கள் நன்றாக மனதில் பதியும் எனக் கூறிய அவர், குழந்தைகளிடையே விளையாட்டுத் திறனை அதிகரிக்க வேண்டும் என்றார்.

பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும் என்றால், அங்கு நூலகம் அவசியம். ஆனால் இதை யாரும் பின்பற்றுவதில்லை. விளையாட்டு மைதானத்திலும் இதே நிலைதான். இது ஒரு கவனிக்க வேண்டிய பிரச்சினை. இப்பிரச்னையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார். கிராமங்களில் உள்ள நூலகங்களை மீட்டு, அவற்றுக்கு மானியம் வழங்க வேண்டும்.

உலகம் முழுவதும் நடந்த பல போராட்டங்களில் இலக்கியம் மற்றும் எழுத்தாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பலர் சிறையில் இருக்கும் போது நிறையப் படித்தார்கள், எழுதினார்கள் எனக் கூறினார்.

மேலும், மாக்சிம் கார்க்கியின் ‘அம்மா’ நாவலை பலமுறை படித்ததாகவும், அது தன்னை மிகவும் பாதித்ததாகவும் நீதிபதி ரமணா கூறினார்.

இந்த டிஜிட்டல் யுகத்தில் திரைப்பட விமர்சனங்களைத் தான் காணமுடிகிறதே தவிர, புத்தகங்களைப் பற்றிய எந்த நல்ல விமர்சனத்தையும் காண முடியவில்லை என்றார்.