கோவை அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு சிகிச்சைக்கு விரைவில் புதிய பிரிவு

கோவை அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையத்துக்கென, தனி வார்டு துவங்கப்பட உள்ளது. போதைக்கு அடிமையானவர்கள், அதிலிருந்து மீள முடியாத நபர்களுக்கு ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் வாயிலாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, மனநல ஆலோசகர்களை கொண்டு கவுன்சிலிங் வழங்கி, தேவைக்கேற்ப 30 நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

அவர்களுக்கு தேவையான மருந்தும் கொடுக்கப்படுகிறது. சமீப நாட்களாக கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில், நோயாளிகளுக்கு தனி வார்டு வசதியில்லை என்ற புகார் உள்ளது.

இது குறித்து, மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறுகையில்:- ”போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே வருகின்றனர். மனநல மருத்துவத்துறை வார்டின் ஒரு பகுதியில், 10 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பாதுகாப்பான சூழ்நிலையில் மட்டுமே மனநலம், போதை அடிமையானவர்களை சிகிச்சை அளிக்க முடியும். ஆகையால், போதை மறுவாழ்வு மையத்திற்கென விரைவில் தனி வார்டு அமைக்கப்படும்,” என்றார்.