கோவையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டி ஆட்சியரிடம் கோரிக்கை

கோவையில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஜல்லிக் கட்டு போட்டியை இந்த ஆண்டும் நடத்த அனுமதிக்க கோரி கோவை ஜல்லிக்கட்டு சங்கத்தினர் ஆட்சியரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர்.

கோவையில் ஆண்டுதோறும் செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்டமான கேலரி ஆயிரக்கணக்கான காளைகள் என நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்கக் கோரி கோவை ஜல்லிக்கட்டு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் .

இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பாக கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. எல் & டி பைபாஸ் சாலை அருகே நடைபெற்ற இந்த போட்டியை மீண்டும் அதே இடத்தில் இந்தாண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த போதிய இடவசதி உள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் தங்குவதற்கு தேவையான இடவசதி உள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.எனவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.