மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவிப்பு

அரியர் தேர்வு தொடர்பான பிரச்சனையில் மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.

அரியா் தோ்வு எழுதிய மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிா்வாகத்தைக் கண்டித்து மாணவா்கள் சாலை மறியல், உள்ளிருப்புப் போராட்டம், கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். இதில் 7 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை ஆகஸ்ட் மாதங்களில், வேளாண் பல்கலைக்கழகத்தில் 2017 அதற்கு முந்தைய வருடங்களில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு நிலுவை தேர்வு நடத்தப்பட்டது.

கொரோனா காரணமாக ஆன்லைன் முறையில் மாணவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து விடை அளிக்க ஏதுவாக செயலி ஒன்று உருவாக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளை மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதன் பொருட்டு மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் மாணவர்களின் கோரிக்கைகளான செய்முறை தேர்வு முடிவுகள் அறிவித்த பின்னர் ஒரு வாரம் கழித்து மறுதேர்வுக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குதல், படிப்பதற்கான பாட குறிப்புகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வழங்குதல், தேர்வு நடத்தும்போது உணவு அளிக்க ஏற்பாடு செய்தல், தங்குவதற்கு இடம் அளித்தல், ஒரு நாளைக்கு ஒரு தேர்வு நடத்துதல், தேர்வு பதிவு கட்டணத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பரிசீலிக்கும்.

இவ்வாறு பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.