நேஷனல் மாடல் பள்ளி சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம்

நேஷனல் மாடல் பள்ளி சார்பில் ‘‘சுகாதார கல்வி – எய்ட்ஸ் விழிப்புணர்வு’’ பிரச்சாரம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளியின் இன்டராக்ட் கிளப் மாணவர்களும், நேஷனல் மாடல் சிபிஎஸ்இ பள்ளியின் பிலன்தெரபி கிளப் மாணவர்களும் கலந்து கொண்டு இதற்கான நிதியை திரட்டினர். இந்த பிரச்சாரத்தில் ஆயுஷ் ஹெல்த் கேர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் ஜெயஸ்ரீ அஸ்வத் மற்றும் பெர்க்ஸ் மருத்துவ மையத்தின் குழந்தைகள் நல தலைமை மருத்துவர் உஷா இளங்கோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

குழந்தை நல மருத்துவர்கள் ஜெயஸ்ரீ அஸ்வத் மற்றும் உஷா இளங்கோ ஆகியோர் பாலியல் ஆரோக்கியம் குறித்து மாணவர்களிடையே பேசுகையில்: ‘உடலில் ஏற்படும் உயிரியல் மாற்றங்களை எவ்வாறு சமாளிப்பது’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர். இளமை பருவத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்து ஜெயஸ்ரீ மாணவர்களிடம் எடுத்துரைத்தார். மேலும் மாணவர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை மருத்துவர்கள் அளித்தனர்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தின் மூலம் 60 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு அந்த தொகை கோவையில் உள்ள அசிசி ஸ்நேஹலயாவுக்கு (எய்ட்ஸ் பராமரிப்பு மற்றும் ஆதரவு மையம்) வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி முதல்வர் பேபி பேசுகையில், எய்ட்ஸ் பாதிப்பு இல்லாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வது குறித்து இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் எய்ட்ஸ் தடுப்பூசியின் பயன்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. தனித்தனியாக இருக்கும்போது ‘நாம் ஒரு துளி, நாம் ஒன்றாக சேரும்போது நாம் ஒரு கடல்’. மாணவர்கள் தங்களுக்குள் சிறிய மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் இதை நிரூபிக்க முடியும் என்று பேசினார்.

மேலும் இந்த பிரச்சாரத்தின் போது, இளமைப் பருவத்தில் மாணவர்களுக்கு உள்ள உணர்ச்சி மற்றும் அவர்கள் தங்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் அவர்களுக்கு கற்பித்தனர்.