மக்கள் நீதி மய்யம் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 67-வது பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு மாரத்தன் போட்டி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் அனுஷா ரவி மற்றும் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் சிட்கோ சிவா ஆகியோர் கூறியதாவது: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் 67-வது பிறந்த நாள் விழா நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நம் ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதால் பலருக்கு உயிர் கிடைக்கும், கமல்ஹாசன் 2002 ஆம் ஆண்டு மருத்துவ ஆராய்ச்சிக்காக தான் இறந்த பிறகு தனது உறுப்புகளை தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக கோவையில் அவரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மக்களிடம் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை குறிச்சி சுந்தராபுரம் பகுதியில் காலை ஆறு மணிக்கு மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் சுமார் 500 ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு ஓடினார்கள். இவர்களுக்கு கமல்ஹாசன் உருவம் பொருந்திய டீசர்ட், மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டியை கோயமுத்தூர் அத்லெட்டிக் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் முறையாக நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள். மொத்தப் பரிசுத் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்தப் போட்டி சுந்தராபுரம் சந்திப்பில் துவங்கி குரும்பபாளையம் பிரிவு வரை சென்று திரும்பவும் சுந்தராபுரம் பகுதிக்கு வந்து நிறைவடைந்தது.

மக்கள் நீதி மய்யம் கோவை மேற்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வு சிட்கோ சிவா தலைமையில், மோகன் ராஜ், கண்ணன் சீதாபதி, வினோபா, விஜயகுமார், சுரேஷ், சமிவுல்லா ஜாவித், முரளிதரன், பிரவீன், நாகராஜ், ரகுநாதன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் செயலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தினர்.