வன்முறை, வெறுப்பைத் தூண்டும் ஃபேஸ்புக் பதிவுகள்

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் ஃபேஸ்புக் சமூக ஊடகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரையும் ஒன்றிணைப்பதே சமூக ஊடகத்தின் நோக்கமாக இருந்தாலும், பிரிவினைவாதம், வெறுப்பு பேச்சுகள், வன்முறையை கொண்டாடும் பதிவுகள் போன்றவை அதிகளவில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் அறிக்கையை தி நியூயார்க் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் ஃபேஸ்புக் மூலம் பரப்படும் வதந்திகள், வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறை கொண்டாட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நிறுவனம் போராடி வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்வதோடு அந்நிறுவனத்திற்கு சொந்தமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்றவற்றை இந்தியாவில் கிட்டத்தட்ட 34 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். எனினும் இந்தியாவில் பகிரப்படும் இத்தகைய தவறான கருத்துகளைக் கட்டுப்படுத்த தேவையான பணியாட்கள், வசதி போன்றவை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இல்லை. தவறான தகவலை வகைப்படுத்துவதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் செலவழித்த நேரத்தில் 87%அமெரிக்காவுக்காகவே செலவிடப்பட்டுள்ளது. 13%மட்டுமே பிற நாடுகளுகாக செலவிடப்பட்டுள்ளது.

தேர்தல் நேரங்களில் ஆளும் கட்சி, எதிர்கட்சி தொடர்புடைய நபர்கள் போலியான கணக்குகளை உருவாக்கி அதன்மூலம் தவறான தகவல்களை பதிவிட்டு மக்களை திசைத் திருப்புகின்றனர். இதன் மூலம் தேர்தல்களை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆய்வில், மேற்கு வங்கத்தில் தோ்தல் குறித்து அதிகமாகப் பாா்வையிடப்பட்ட பதிவுகளில் சுமாா் 40 சதவீதம் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட நம்பகத்தன்மையற்ற ஃபேஸ்புக் கணக்கு 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றதும் தெரியவந்துள்ளது.